விழுப்புரம்: கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கையில்தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில், மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும்,‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இத்திட்டத்துக்கென இந்தாண்டு ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு தமிழகம் முழுவதும் 1.63 கோடி பேர் விண்ணப்பித்த நிலையில், தகுதியான 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கை சரிபார்க்கும் நடவடிக்கை தற்போது நடந்து வருகிறது.
இதன்படி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பயனாளிகளின் வங்கிக் கணக்குக்கு ரூ.1-ஐ அனுப்பி சரிபார்க்கப்படும் நடைமுறை தொடங்கியது. இதற்கான தகவல் குறுஞ்செய்தி வாயிலாக பயனாளிக்கு தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது ஒவ்வொரு பயனாளிக்கும் 10 பைசா மட்டுமே அனுப்பப்பட்டு வருகிறது.
இதுகுறித்து விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வட்டாரங்களில் கேட்டபோது, “ஒருவருக்கு ரூ.1 அனுப்பினால் கூட ரூ.1.06 கோடி செலவாகிறது. இச்செலவை எப்படி ஈடுகட்டுவது என யோசித்து, பயனாளியின் கணக்குக்கு 10 பைசா மட்டுமே அனுப்பி வருகிறோம். இதன்மூலம் ரூ 10.06 லட்சம் செலவாகும்” என்று தெரிவித்தனர்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்துள்ள பயனாளிக்கு 10 பைசா வரவு வைக்கப்பட்டாலும், அதற்கான குறுஞ்செய்தி வருவதற்குவாய்ப்புண்டு. அதே நேரத்தில் தனியார் வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு இந்த மிகச்சிறிய தொகைக்கான குறுஞ்செய்தி வர வாய்ப்பில்லை.
அவர்கள் மொபைல் பேங்க் அல்லதுஏடிஎம்மில் மினி ஸ்டேட்மெண்ட் எடுத்தே 10 பைசா வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்து, தாங்கள் பயனாளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளோமா என்பதை தெரிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 10 பைசா பரபரப்புக்கு மத்தியில், காஞ்சிபுரத்தில் முறைப்படி இன்று முதல்வர் இத்திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் சிலருக்கு நேற்றே அவர்களது வங்கிக் கணக்குக்கு 10 பைசா அனுப்பி சரி பார்க்கப்பட்டு, ரூ,1,000 உதவித் தொகையும் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இதுபோல் மற்ற இடங்களில் பணம் வராததால் பயனாளிகளிடையே சிறு குழப்பம் நிலவுகிறது. இதுபற்றி அரசு தரப்பில் கேட்ட போது, “உரிய பயனாளிகளின் பட்டியல் தயார் ஆன நிலையில், உடனே மண்டலவாரியாக பிரிக்கப்பட்டு, அந்தந்த வங்கிகளுக்கு அனுப்பப்பட்டு விட்டது.
அவர்கள் வங்கிக் கணக்கை சரிபார்த்த நிலையில், பணிச்சுமை கருதி சற்று முன்னரே பணத்தை அனுப்பியிருக்க வேண்டும். முதல்வர் இன்று திட்டத்தை தொடங்கி வைத்ததும் முறையாக அனைத்து பயனாளிகளுக்கும் ரூ.1,000வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
இதில் எந்த குழப்பமும் ஏற்படாது. யாரும் விடுபட வாய்ப்பில்லை” என்று தெரிவித்தனர். ஒருவருக்கு ரூ.1 அனுப்பினால் ரூ.1.06 கோடி செலவாகிறது. இதை யோசித்து 10 பைசா அனுப்பப்பட்டுள்ளது.