State

மகளிருக்கு ரூ.1000 உதவித் தொகை திட்டம்: நாராயணசாமிக்கு ஆளுநர் தமிழிசை பதில் | Tamilisai’s Reply to Narayanasamy

மகளிருக்கு ரூ.1000 உதவித் தொகை திட்டம்: நாராயணசாமிக்கு ஆளுநர் தமிழிசை பதில் | Tamilisai’s Reply to Narayanasamy


புதுச்சேரி: “ஆளுநராக மக்கள் பணியைத் தான் செய்து கொண்டிருக்கிறேன். நல்ல எண்ணத்தோடு பெண்களுக்கான உதவித் தொகை திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. அது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது” என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார்.

புதுச்சேரி அரசுப் பள்ளிகளை ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜன் பார்வையிட்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக இன்று ஆலங்குளம் அரசு தொடக்கப் பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளியைப் பார்வையிட்டார். அங்கு மாணவர்களோடு கலந்துரையாடினார். மாணவர்களுடன் ஸ்மார்ட் வகுப்பறையைக் கவனித்தார். டெங்கு கொசு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நாடகத்தை அரங்கேற்றிய மாணவர்களைப் பாராட்டினார். மாணவர்களுக்காக வைக்கப்பட்டிருந்த மதிய உணவைப் பரிமாறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “டெங்கு கொசு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மாணவர்கள் ஏற்படுத்தும் போது அது மக்களுக்கு நன்றாக சென்றடையும். எல்லாவற்றுக்கும் மேலாக பெண்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாள். பாரத தேசத்தில் எந்த அங்கீகாரம் வேண்டும் என்று பெண்கள் பொது வாழ்க்கையில் இருக்கிறார்களோ அந்த 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க பிரதமர் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இது பல பெண்கள் பொது வாழ்க்கைக்கு வர உதவியாக இருக்கும்.

பெண்கள் மூலம் சமுதாயம் பலனடைவதற்கும் மிகுந்த உதவியாக இருக்கும். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கழித்து, வாக்காளர்களில் ஏறக்குறைய 50 சதவீதமாக இருக்கும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தால் புதுச்சேரி மாநிலத்தில் 11 சட்டப்பேரவை உறுப்பினர்களும் தமிழகத்தில் 77 சட்டப்பேரவை உறுப்பினர்களும் பெண்களாக இருப்பார்கள். தமிழகத்தில் 13 பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பார்கள். இது மிகப் பெரிய வாய்ப்பு. அதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

துணை நிலை ஆளுநராக உண்மையாக மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்று பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். பெண்களுக்கான உதவித் தொகை குறித்து, என்னிடம் வரும் கோப்புகளின் அடிப்படையில்தான், அதிகாரிகளிடம் இருந்து கிடைக்கும் தகவலைகளின் அடிப்படையில்தான் கூறுகிறேன். அதற்காக பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

ஆளுநராக மக்கள் பணியைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். நல்ல எண்ணத்தோடு ஒரு திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. அது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டு அது தொடங்கப்பட்டிருக்கிறது. அதைப் பாராட்ட வேண்டும்.

ஆசாதி கா அம்ருத் மகோத் சவ் சுதந்திரத்தின் 75வது ஆண்டு கொண்டாட்டத்தின் போது தொடங்கி 75 பள்ளிகளுக்குச் செல்ல வேண்டும் என்று குறிக்கோளோடு பார்வையிட்டு வருகிறேன். அரசு பள்ளி மாணவர்களின் அறிவாற்றலைக் கண்டு, அந்த பள்ளி குழந்தைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் மிகவும் கடுமையாக முயற்சி செய்து அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 10 சதவீத இட ஒதுக்கீடு பெற்றிருக்கிறோம். அரசு பள்ளி மாணவ – மாணவிகள் பிரதமருக்கு நன்றி கடிதம் எழுதி இருக்கிறார்கள். அது மிகுந்த பாராட்டைப் பெற்றிருக்கிறது. புதுச்சேரியில் உள்ள ஆசிரியர்கள் எந்த அளவிற்கு பயிற்சி கொடுத்தார்கள் என்று அதில் பேசியிருக்கிறார்கள்.

தெலங்கானா ராஜ்பவனில் கூட அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சி ஒன்று நடக்க இருக்கிறது. கல்வி சாரா செயல்பாடுகளில் விளையாட்டு, கலை, பண்பாடு ஆகியவற்றில் மாணவர்களுடைய திறமையை மேம்படுத்துவும், மற்ற குழந்தைகளை ஊக்கப்படுத்துவதற்கும், எல்லா விதத்திலும் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பதற்கும், பொதுப் போட்டிகளில் அவர்கள் கலந்து கொள்ள உதவி செய்யும் நோக்கத்திலும் இந்த திட்டத்தை தொடங்குகிறோம். அரசு மருத்துவமனைகளும், அரசு பள்ளிகளும் சாமானிய மக்களுக்கு பலன் தர வேண்டும் என்பது என்னுடைய அடிப்படையான ஆசை.” என தமிழிசை கூறினார்.

முன்னதாக, “புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 நிதியுதவி திட்டம் நடைமுறைப்படுத்தவில்லை. 75 ஆயிரம் பேருக்கு கொடுக்கப் பட்டு வருவதாக துணை நிலை ஆளுநர் சொல்லுகிறார். அது உண்மைக்கு புறம்பானது. இதுவரை ஒரு பைசா கூட அவர்களின் வங்கி கணக்கில் சேரவில்லை. ஆளுநர் தமிழிசை சம்மந்தப்பட்ட அதிகாரிகளை விசாரித்து அறிக்கை கொடுக்க வேண்டும். தமிழிசை நாடாளுமன்ற தேர்தலில் நிற்பதற்காக இது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி மக்கள் மத்தியில் இடம் பிடிக்கலாம் என்று நினைக்கின்றார்” என்று துச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *