ஸ்ரீவில்லிபுத்துார்: போத்தீஸ் ஜவுளி நிறுவனங்களின் உரிமையாளர் கே.வி.பி.சடையாண்டி மூப்பனார்(84) வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் ஸ்ரீவில்லிபுத்துாரில் காலமானார். அவரது உடல் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மினிஸ்டர் ஒயிட் மில் வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் போத்தீஸ் மூப்பனார் – குருவம்மாள் தம்பதிக்கு 1940-ம் ஆண்டு நவம்பர் 20-ல் சடையாண்டி மூப்பனார் பிறந்தார். நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்த போத்தீஸ் மூப்பனார், ஆரம்ப காலத்தில் சைக்கிளில் சென்று ஜவுளி வியாபாரம் செய்தார். 1949-ல் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே ‘போத்தி மூப்பனார்’ என்ற சிறிய ஜவுளிக் கடையைத் தொடங்கினார்.
சடையாண்டி மூப்பனாருக்கு வேலம்மாள் என்ற மனைவியும், ரமேஷ், போத்திராஜ், முருகேஷ், மகேஷ், கந்தசாமி, அசோக் ஆகிய 6 மகன்களும் உள்ளனர். சடையாண்டி மூப்பனார் 1977-ல் ஆண்டாள் கோயில் அருகே போத்தீஸ் என்ற ஜவுளிக் கடையை பெரிய அளவில் தொடங்கினார்.
தற்போது போத்தீஸ் நிறுவனம்திருநெல்வேலி, மதுரை, சென்னை,கோவை, திருவனந்தபுரம், பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 18 கிளைகளுடன் ஆயிரக்கணக்கான ஊழியர்களுடன் செயல்பட்டு வருகிறது.
சடையாண்டி மூப்பனார் வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள இல்லத்தில் காலமானார். ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையம் சாலையில் உள்ள மினிஸ்டர் ஒயிட் ஆலை வளாகத்தில் சடையாண்டி மூப்பனாரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அவரது உடலுக்கு முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், போத்தீஸ் நிறுவன ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். ஆலை வளாகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.