
பொள்ளாச்சி: கடந்த சில ஆண்டுகளாக பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு, சோலையாறு அணை, கூழாங்கல் ஆறு ஆகியவற்றை பார்க்கவரும் வெளியூர் சுற்றுலா பயணிகள், நீர்நிலைகளில் இறங்கி குளித்து மகிழ்கின்றனர். அவர்களில் சிலர் ஆழம் மிகுந்த பகுதிக்கு சென்றும், புதைமணல், சுழலில் சிக்கியும் உயிரிழந்து வருகின்றனர். மேலும், மது அருந்தும் திறந்தவெளி பாராகவும் தடுப்பணைகள் மாறி வருகின்றன. ஆழியாறு அணைப் பகுதியில் தொடங்கி கேரளா எல்லை வரை பள்ளிவிளங்கால், அரியாபுரம், காரப்பட்டி, பெரியணை, வடக்கலூர் என 5 தடுப்பணைகள் உள்ளன. ஆழியாறு அணைப் பகுதியில் குளிக்க அனுமதிக்க மறுக்கப்படுவதால், இளைஞர்கள் கவனம் தடுப்பணைகள் பக்கம் திரும்புகிறது. நகர் பகுதிகளில் வசிக்கும் இளைஞர்கள், விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து மதுகுடிக்க, இப்பகுதியில் உள்ள ஆற்றுப்புறங்களை தேர்ந்தெடுக்கின்றனர். பின் இங்குள்ள ஆற்றில் குளிக்கின்றனர். போதையில் ஆழம் மிகுந்த பகுதிக்கு சென்றும், சேற்றில் சிக்கியும் உயிரிழக்கின்றனர்.
ஆனைமலை ஆற்றில், பேரூராட்சியின் சாக்கடை கழிவுநீர் கலந்து சேறும், சகதியுமாக உள்ளது. இங்குள்ள ஆற்றில் குளிக்க வந்து இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60-க்கும் மேல் இருக்கும். அதேபோல, வால்பாறையில் சோலையாறு அணை, கூழாங்கல் ஆறு, ஆழியாறு ஆற்றில் பள்ளிவிளங்கால் தடுப்பணை, அரியாபுரம் தடுப்பணை, பொங்காளியூர் ஆற்றுப்பகுதி, ரமணமுதலிபுதூரில் வலம்புரியம்மன் கெஜம், ஆனைமலையில் பசுவம்துறை, ஆனைமலை ஆற்றுபாலம் பகுதி, அம்பராம்பாளையம் ஆற்று பகுதிகளில், இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலும் நண்பர்களுடன் வரும் நீச்சல் தெரியாதவர்களும், ஆசையிலும், நீச்சல் பழகும் ஆர்வத்திலும் ஆற்றில் இறங்கி இறந்தவர்களே அதிகம். கடந்த சில நாட்களுக்கு முன்பு சோலையாறு அணையில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர்கள் 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். காடம்பாறை தடுப்பணை, மேல்ஆழியாறு அணை பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் சிலர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, “சிறுவர்கள், மாணவர்கள் குளிப்பதற்கும், நீச்சல் பழகுவதற்கும் ஆற்றுப் பகுதிக்கு அதிகம் வருகிறார்கள். போதுமான பாதுகாப்பு வசதியின்றியும், பெரியவர்களின் கண்காணிப்பில் இல்லாமல் தனியாகவும், நண்பர்களுடனும் அதிகம் வருகின்றனர். இவர்களை வீட்டில் பெற்றோர்களும், ஆற்றுப்பகுதியில் காவல் துறையினரும் கண்காணித்து தடுக்க வேண்டும். மேலும், ஆழம் மிகுந்த பகுதிகளில் குளிப்பதை தடை செய்து எச்சரிக்கை பலகையை காவல்துறையினர் வைக்க வேண்டும். ஆற்று பகுதியில் குடிமகன்களின் நடமாட்டத்தை கண்காணித்து தடுக்க வேண்டும். போதையில் ஆற்றில் இறங்கி குளிக்கும் இளைஞர்களே பெரும்பாலும் உயிரிழந்துள்ளனர். அதேபோல, பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் ஆற்றில் ஆழம் மிகுந்த பகுதிகளில் குளிப்பதை தடுக்க வேண்டும்” என்றனர்.
ஆபத்தான நீர்நிலைகள்: கூழாங்கல் ஆறு, வாட்டர் பால்ஸ் ஆறு, கருமலை இறைச்சல் பாறை ஆறு, சோலையாறு சுங்கம் ஆறு, ஸ்டேன்மோர் ஆறு, கூடுதுறை ஆறு, வெள்ளமலை டனல் ஆறு, கெஜமுடி டனல் ஆறு, சக்தி எஸ்டேட் தங்கவேல் ஆறு, தலநார் நீர்வீழ்ச்சி, காடம்பாறை அணை பகுதி, அப்பர் ஆழியாறு அணை பகுதி, சோலையாறு அணை பகுதி, காடம்பாறை 501 எண் டனல் ஆறு, சின்னக்கல்லாறு, சேடல் டேம் ஆறு, அணலி நீர்வீழ்ச்சி, மானாம்பள்ளி தங்கவேல் நீர்வீழ்ச்சி ஆகிய நீர்நிலைகளை ஆபத்தான இடங்களாகவும், தடை செய்யப்பட்ட பகுதிகளாகவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.