வேலூர்: அரசு பொதுத்தேர்வு பணிகளில் அலட்சியமாக செயல்பட்டதாக வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேசபிரபா நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நேற்று தொடங்கின. இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டதாகவும், அதற்குமாவட்ட கல்வி அலுவலர் நேசபிரபாதான் காரணம் என்றும் குற்றம்சாட்டப்பட்டது.
இதயடுத்து, மாவட்ட கல்வி அலுவலர் நேசபிரபாவை பணியிடை நீக்கம் செய்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் அருள்ஒளி நேற்று உத்தரவிட்டார். இதுகுறித்து மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து மாவட்ட அளவிலான கல்வி அதிகாரிகளுக்கு பலமுறை சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், தேர்வுப் பணிகளை சரியாக செய்யவேண்டும், எவ்விதப் குறைபாடுகளும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். முறைகேடுகளுக்கு உடந்தையாக இருக்கக் கூடாது. அப்படி இருப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அரசு பொதுத் தேர்வு ஏற்பாடுகள் தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை கல்வித் துறை உயரதிகாரிகள் தொடர்பு கொண்டபோது, வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேசபிரபா செல்போனை எடுக்கவில்லை. இது தொடர்பான புகாரின் பேரில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்’’ என்றனர்.