ஸ்ரீநகர்: பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்று ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா கூறியுள்ளார். பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் கொல்லப்பட்ட காஷ்மீர் டிஎஸ்பி ஹிமாயூன் முசாமின் வீட்டக்குச் சென்று அவர் ஆறுதல் கூறினார்.
அப்போது பேசிய ஃபரூக் அப்துல்லா, "நாங்கள் பல ஆண்டுகளாக இந்த அழிவினைப் பார்த்து வருகிறோம். இதன் முடிவினை நான் இன்னும் பார்க்கவில்லை. நாங்கள் ரஜோரி போன்ற இடங்களில் நடக்கும் என்கவுன்டர் பற்றியும் கேள்விப்படுகிறோம். அதேநேரத்தில் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டதாக அரசு கூறுகின்றது. தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டதா? ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்பும் வரை தீவிரவாதம் முடிவுக்கு வராது. சண்டை அமைதியைத் தராது. பேச்சுவார்த்தையே அமைதியைத் தரும். உக்ரைனே அதற்கு உதாரணம். சண்டையால் அந்நாடு அழிக்கப்பட்டுள்ளது. அங்கேயும் பேச்சுவார்தையே அமைதியைக் கெண்டுவரும், வேறு வழியே இல்லை" என்று தெரிவித்தார்.