
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி நகர் முதலை பண்ணை, பள்ளி சிறுவர்களை கவரும் வகையில் புதுப்பொலிவு பெற்று வருகிறது. அமராவதி அணை அருகேசுமார் 12 ஏக்கர் பரப்பளவில் முதலை பண்ணை அமைந்துள்ளது.
ஆசியாவில் அழிந்துவரும் இனமாக கருதப்படும் சதுப்பு நில முதலை இனத்தைபாதுகாக்கும் நோக்கில் இப்பண்ணை தொடங்கப்பட்டு, கடந்த 48 ஆண்டுகளாக வனத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள அமராவதி அணை, படகு சவாரி, சைனிக் பள்ளி உள்ளிட்ட இடங்களைக் காண வரும் சுற்றுலா பயணிகள், முதலை பண்ணையையும் பார்க்க தவறுவதில்லை. அமராவதி அணையைக் காண ஆண்டுக்கு பல லட்சம் பேர் வருகை தருவதாக கூறப் படுகிறது. அணைக்குவரும் வாகனங்களுக்கு பொதுப்பணித்துறையால் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதேபோல முதலைகள் பண்ணையை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளில் பெரியவர்களுக்கும், சிறுவர்களுக்கும் தனித்தனியே நுழைவுக் கட்டணம்வசூலிக்கப்படுகிறது. மேலும் வீடியோ கேமரா கொண்டு செல்ல தனி கட்டணம், பார்க்கிங் கட்டணம் என ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் வனத்துறைக்கு வருவாய் கிடைத்து வருகிறது. பொன்விழா கொண்டாட்டத்தை எதிர்கொள்ளும் வகையில் கடந்த 2 ஆண்டுகளாக புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
புல் தரை நடைபாதை, முயல், கொக்கு, மயில், இருவாச்சி பறவை, யானை, புலி, சிறுத்தை, ஒட்டக சிவிங்கி உள்ளிட்ட விலங்குகளின் தத்ரூபமான சிலைகள், பொம்மைகள், முதலைகளின் வகைகள், சதுப்பு நில முதலைகள் முட்டையிடுவது முதல் அதன் ஆயுள் காலம் வரையிலான படங்கள் வரையப்பட்டு, அதற்கான விளக்கங்களும் எழுதப்பட்டுள்ளன.
இதுகுறித்து வனத்துறையினர் கூறிய தாவது: கல்வி விழிப்புணர்வுக்காகவும், அழியும் நிலையில் உள்ள ஓர் இனத்தை பாதுகாக்கும் நோக்கிலும் இப்பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்,பெண், குட்டிகள் என சுமார் 80 முதலைகள் பராமரிக்கப்படுகின்றன. தினமும் அவற்றுக்கு உணவாக 35 கிலோ மாட்டிறைச்சியும், 14 கிலோ மீன் துண்டுகளும் வழங்கப்படுகின்றன.
சராசரியாக ஒரு முதலைக்கு அரை கிலோ வீதம் உணவு விநியோகிக்கப்படும். இவை அதிகம் உணவு உட்கொள்வதில்லை. வாரத்தில் 6 நாட்கள் உணவு அளிக்கப்படும். ஞாயிற்றுக் கிழமை உணவு கிடையாது.
சுற்றுலா பயணிகளுக்கு தேவையான கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. லாப நோக்கமின்றி செயல்பட்டு வரும் இப்பண்ணையின் மேம்பாட்டுக்கு அரசின் நிதியுதவி மட்டுமின்றி, தனியார் அமைப்புகளும், தன்னார்வலர்களும் நிதியுதவி அளித்தால் முதலைகள் பண்ணை மேலும் புதுப்பொலிவு பெறும், என்றனர்.