உதகை: ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் நீலகிரி மாவட்டம், அவர்களின் சொர்க்க பூமியாக இருந்தது. அதே சமயம், சுதந்திர போராட்ட தியாகிகளின் நரக பூமியாகவும் இருந்தது.
தமிழ்நாட்டில் மட்டுமின்றி, நாட்டில் சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடுபவர்களை துன்புறுத்தியது மட்டுமின்றி, பலரையும் அழைத்து வந்து நீலகிரி மாவட்டத்திலுள்ள சிறைகளில் அடைத்து மரண தண்டனையும் நிறைவேற்றப்பட்டது. அந்த வகையில், உதகை அருகே தொட்ட பெட்டா சின்கோனா, நடுவட்டம் சின்கோனா, மஞ்சூர் அருகே கேரிங்டன் பகுதியிலுள்ள கட்டிடங்கள் மிக மோசமான சிறைகளாக இருந்தன.
1850-களில் இந்தியாவில் மலேரியா பாதிப்பு ஏற்பட்டு ஏராளமானோர் உயிரிழந்தனர். இதனால், மலேரியா நோய்க்கு மருந்தான சின்கொய்னா நாற்றுகளை பெரு மற்றும் பொலிவியா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து நடுவட்டம், தொட்டபெட்டா உட்பட நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் நடவு செய்தனர். இவற்றை நடவு செய்ய உள்ளூர் பழங்குடியினர், பொதுமக்களை பயன்படுத்தினர்.
பணிகள் மிகவும் மந்தமாக நடந்தன. இதனால், 1856 முதல் 1960-ம் ஆண்டு வரை நடைபெற்ற ஓபியம் போர் என்று அழைக்கப்பட்ட பிரிட்டீஸ் – சீன போரில் ஆங்கிலேயர்களிடம் போர் கைதிகளாக பிடிபட்ட சீனர்கள் நாடு கடத்தப்பட்டு, நீலகிரி மாவட்டத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் சுமார் 200 பேர் நடுவட்டம் சிறைச்சாலையிலும், தொட்ட பெட்டா சின்கோனா சிறையில் 200 பேரும் அடைக்கப்பட்டனர்.
தொட்ட பெட்டா உள்ளிட்ட பகுதிகளில் சின்கொய்னா பயிரிடும் பணிகள், மருந்துக்காக அவற்றின் பட்டைகளை உரிக்கும் பணிகளில் சீன கைதிகள் ஈடுபடுத்தப்பட்டனர். அதன் பின் சில ஆண்டுகள் செயல்பட்ட இந்த சிறைகள் மூடப்பட்டன. நடுவட்டம் சிறை கட்டிடம் தற்போது தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அவை புனரமைக்கப்பட்டு காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால், உதகை தொட்ட பெட்டா சின் கோனா வளாகத்தி லுள்ள சிறைச்சாலை கட்டிடம் பராமரிப்பின்றி காட்சியளிக்கிறது. இந்த சிறைச் சாலையின் ஒரு பகுதியில் தற்போது வரை தபால் நிலையம் இயங்குகிறது. பகுதி நேர தபால் நிலையமான இதில், ஓர் ஊழியர் மட்டுமே பணியாற்றுகிறார். தினமும் வரும் தபால்களை பட்டுவாடா செய்வதுடன், வைப்பு நிதி கணக்கு உள்ளிட்ட கணக்குகளுக்கான பண வரவு ஆகியவற்றை அப்பகுதி மக்களிடமிருந்து சேகரித்து செல்கிறார்.
இது தொடர்பாக அஞ்சலக ஊழியர் கூறும்போது, “நீலகிரி அஞ்சல் கோட்டத்தின் கீழ் இயங்கிவரும் இந்த தபால் நிலையத்தின் தொடர்புடைய துணை அஞ்சல் அலுவலகம், ஸ்டோன் ஹவுஸ் ஹில் தபால் அலுவலகம் ஆகும். தொட்டபெட்டா தபால் நிலையம், அஞ்சல்கள் மற்றும் பார்சல்களை வழங்குதல், பணப் பரிமாற்றம், வங்கி, காப்பீடு மற்றும் சில்லறை சேவைகள் ஆகிய அனைத்து அஞ்சல் சேவைகளையும் வழங்குகிறது.
தற்போது, அஞ்சல் சேவைகளுடன், நிதிச் சேவைகள், சில்லறை சேவைகள் மற்றும் பிரீமியம் சேவைகளும் வழங்கப்படுகின்றன. ரீடெய்ல் போஸ்ட் மூலமாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கான டெலிபோன், மொபைல் பில், மின் கட்டணம் போன்ற நுகர்வோர் பில்களை வசூலிக்கும் வசதி வழங்கப்படுகிறது.
தொட்ட பெட்டாவின் தபால் வாடிக்கையாளர்கள் தங்களின் பில்களை செலுத்தி மற்ற சில்லறை சேவைகளை இங்கு பெறலாம்’ என்றார். பகுதி நேர தபால் நிலையமாக இருக்கும் தொட்டபெட்டா தபால் நிலையம், சிதிலமடைந்த கட்டிடத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த கட்டிடம் இடியும் நிலையில் உள்ளதால், ஆபத்தான சூழ்நிலையில், அஞ்சலக ஊழியர் பணியாற்றுகிறார்.
இது தொடர்பாக சுற்றுலா ஆர்வலர்கள் கூறும் போது, “வரலாற்று சிறப்புமிக்க இக்கட்டிடம் இடிந்து, வரலாறும் மண்ணோடு மண்ணாகி போவதற்குள் முழு கட்டிடத்தையும் புனரமைத்து, நடுவட்டத்தில் உள்ளது போல சிறைச்சாலை அருங்காட்சியமாக மாற்றினால், வரலாற்றை பறைசாற்றும் முக்கிய சுற்றுலா தலமாக மாறும். அஞ்சலகமும் பாதுகாப்பான இடத்தில் இயங்கும்” என்றனர்.