புதுச்சேரி: “புதுச்சேரி முழுக்க மாமூல் விவகாரத்தால் தாக்குதல் அதிகரித்து ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறது. ரவுடிகள் பலருக்கும் எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது” என்று காங்கிரஸ் மாநிலத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் தெரிவித்தார்.
அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: புதுச்சேரியில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் சரியாக செயல்படவில்லை. இதன் காரணமாக ஏழை மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மருத்துவ உதவி சரியாக கிடைக்கவில்லை. நோயாளிகள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக தெரிவித்தும் அரசு செவி சாய்ப்பதில்லை. ஆயுஷ்மான் பாரத்தில் அடையாள அட்டைக்கூட தரவில்லை. எந்த மருத்துவமனைக்கு சென்றால் உதவி கிடைக்கும் என்ற விவரம் கூட இல்லை. ஒட்டுமொத்தமாக இத்திட்டத்தையே தோல்வி அடைய செய்கிறது. ஒதுக்கீடு செய்த பணத்தை கூட முழுமையாக செலவிட முடியாத நிலை உள்ளது. முதல்வரிடம் எடுத்து சொல்வதில் ஏற்பட்ட தயக்கமும் இத்திட்டத் தோல்விக்கு ஓர் காரணம்.