புதுச்சேரி: கடைகள், வீடுகள், அலுவலகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் என பல்வேறு இடங்களுக்கு எளிதாகவும், வேகமாகவும் பயணம் செய்ய இன்றைக்கும் ஆட்டோக்களைப் போல் அற்புதமான ஒரு வாகனம் கிடையாது.
புதுச்சேரியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஓடுகின்றன. இவற்றில் 2,830 ஆட்டோக்கள் மட்டுமே போக்குவரத்து துறையில் பதிவு செய்யப்பட்டவையாகும். போதிய பேருந்து சேவைகள் இல்லாத பகுதிகளுக்கு சென்று வர புதுச்சேரியில் ஆட்டோக்களே பெரிதும் பயன்பட்டு வருகின்றன. குறிப்பாக பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் ஆட்டோக்களில் பயணிக்கவே விரும்புகின்றனர்.
ஆனால், புதுச்சேரியில் பலர் மீட்டர் பொருத்தாமலேயே ஆட்டோக்களை இயக்குகின்றனர். மீட்டர் பொருத்தி யிருந்தாலும், மீட்டர் போட்டு ஆட்டோவை ஓட்டுவதில்லை. ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் நிர்ணயம் செய்து புதுச்சேரி அரசு அரசாணை வெளியிட்டது.
அதன்படி, பகல் நேர சேவையாக காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 1.8 கி.மீட்டருக்கு ரூ.35, கூடுதலாக ஒவ்வொரு கி.மீட்டருக்கும் ரூ.18, காத்திருப்பு கட்டணம் ஒவ்வொரு 5 நிமிடத்துக்கும் ரூ.5 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இரவு நேர சேவையாக இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை பகல் நேர சேவைக் கட்டணத்துடன் 50 சதவீதம் கூடுதலாக செலுத்த வேண்டும் என்றும் நிரணயம் செய்யப்பட்டது.
உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகளுக்கு பயன்படும் வகையில், முன் கட்டண (ப்ரீபெய்டு) ஆட்டோ சேவை புதிதாக அறிமுகம் செய்யப்பட்டது. மக்கள் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளில் முன் கட்டண ஆட்டோ சேவை மையங்கள் தொடங்கவும், முன் கட்டண ஆட்டோ சேவைக்கு 20 சதவீதம் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது.
மேலே குறிப்பிட்ட கட்டண விகிதத்தை ஒவ்வொரு ஆட்டோவிலும் பயணிகளின் பார்வையில் தெரியும்படி வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இந்த விலை நிர்ணயம் கடந்த 2016 டிசம்பர் 15-ம் தேதியில் இருந்து அமல்படுத்தப்பட்டது. ஆனால் இந்த புதிய கட்டணம் நடைமுறைக்கு வராமலேயே முடங்கியது. இதனால் தன்னிச்சையாகவே கட்டணத்தை நிர்ணயம் செய்து, ஆட்டோ ஓட்டுநர்கள் தாறுமாறாக வசூலித்து வருகின்றனர்.
குறிப்பாக, புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ரயில் நிலையம் செல்ல ரூ.150-க்கு மேல் கட்டணம் பெறுகின்றனர். இந்திரா காந்தி சிலை சதுக்கத்தில் இருந்து மூலக்குளம் செல்ல ரூ.300 வரை வசூலிக்கின்றனர். நகரின் முக்கிய இடங்களுக்கு செல்லவும், அதற்கு ஏற்ப கூடுதலாக கட்டணம் வாங்குகின்றனர். இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.
கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருப்பது போன்று மீட்டர் பொருத்தி ஆட்டோக்களில் முறையாக கட்டணம் வசூலிக்க அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறும்போது, “புதுச்சேரியில் ஏற்கெனவே ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்து, அறிவிக்கப்பட்டது. இந்தியாவிலேயே புதுச்சேரியில் தான் நாம் நிர்ணயித்த கட்டணம் அதிகம். ஆனால், ஆட்டோ ஓட்டுநர்கள் இதனை பின்பற்றுவதில்லை. இதனால் ஆட்டோ ஓட்டுநர்கள் மீட்டரை பயன்படுத்துவதில்லை.
இதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறையில் ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. இதைக் கவனத்தில் கொண்டு, ஆட்டோக்களின் மீது போக்குவரத்து போலீஸாரும் நடவடிக்கை எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இனி போக்குவரத்து துறையும், போக்குவரத்து போலீஸாரும் இணைந்து விதிகளை மீறும், குறிப்பாக மீட்டர் இல்லாத ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்” என்று தெரிவித்தனர்.
ஆனால், ஆட்டோ உரிமையாளர்கள் தரப்பு கருத்து வேறு மாதிரியானதாக இருக்கிறது. “‘2016-ல் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை தற்போது ஏற்க இயலாது. எரிபொருள் விலை உயர்வை கருத்தில் கொள்ள வேண்டும். இதுபற்றி மீண்டும் பேசி முடிவெடுக்க வேண்டும். அதன் பின்னரே மீட்டரைப் பொருத்தி, அதுபடி முறையாக வசூலிக்குமாறு கூறலாம்” என்று கூறுகின்றனர்.
ஆனால், பல்வேறு ஊர்களுக்குச் சென்று ஆட்டோக்களில் தொடர்ந்து பயணிக்கும் தரப்பினர் இதை மறுக்கின்றனர். “கேரள மாநிலத்தில் ஓடும் ஆட்டோக்களில் மிகச்சரியாக கட்டணத்தை நிர்ணயம் செய்து வசூலிக்கின்றனர். கேரளத்தை ஓட்டியுள்ள நமது புதுச்சேரி பிராந்தியத்தின் ஒரு பகுதியான மாஹேயில் கூட இந்த ஒழுங்கு முறை உள்ளது. அங்கெல்லாம் எரிபொருள் விலை உயரவில்லையா?” என்று கேள்வி எழுப்புகின்றனர்.
நியாயமான கட்டணத்தை நிர்ணயம் செய்து, சரியான சேவை வழங்கினால் இன்னும் இன்னும் ஆட்டோக்களை நோக்கி வருபவர்கள் அதிகமாக வாய்ப்புண்டு. அதை விடுத்து ஓரிரு சவாரி கிடைத்தால் போதும்; அதிகமாக வாங்க வேண்டும் என்ற மனநிலையோடு இயக்கினால் அது அவர்களுக்கே நஷ்டமாகி விடும்.
எத்தனை எத்தனையோ வாகனங்கள் வந்தாலும், புதுச்சேரியில் இருசக்கர வாகனங்களை சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு விட்டாலும் ஆட்டோ என்பது அழகான, இலகுவான ஒரு அவசர தேவைப் பயணம். பயணிகளை அதை நோக்கி வரச்செய்யும் பொறுப்பு ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் கைகளில் தான் உள்ளது.