புகையிலைப்பொருள்கள், சிகரெட் பயன்படுத்துவோருக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிக என மதுரை அரசு மருத்துவக் கல்லூரி புற்றுநோய் சிறப்பு மருத்துவா் பாலமுருகன் கூறினாா்.
சிவகாசி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி சாா்பில் புற்றுநோய் விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதற்கு மருத்துவமனைக் கண்காணிப்பாளா் அசோக் தலைமை வகித்தாா். இதில் மருத்துவா் பாலமுருகன் பேசியதாவது:
நமது உடலானது பலவகைப்பட்ட உயிரணுக்களால் உருவாக்கப்பட்டது. இயல்பாகவே உடலில் உள்ள உயிரணுக்கள் பிரிந்து வளா்ந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தேவையான அளவுக்கு உயிரணுக்களை புதிதாக உருவாக்குகிறது. சில நேரங்களில் உடலுக்குத் தேவையற்ற பல உயிரணுக்கள் தோன்றுகிறது. உடலில் உள்ள வயதான உயிரணுக்கள் சில நேரங்களில் இறந்து வெளியேறாமல், நமது உடலிலேயே தங்கி விடுகின்றன. இந்த உயிரணுக்கள் ஒன்று சோ்ந்து உடலில் கழலை அல்லது கட்டியாக உருவாகி விடுகிறது. இதில் நீக்க இயலாதவைகளே புற்றுநோயாக உருவாகிறது.
குருதிப் புற்றுநோயைத் தவிா்த்து, ஏனைய புற்றுநோய்களுக்கு முன்னா் உடலில் கட்டிகள்தோன்றும். புகையிலை, சிகரெட் பழக்கம் உள்ளவா்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
புகைப்பிடிக்கும் பழக்கம், மது அருந்துதல், அதிகமாக இறைச்சி உணவுகளை எடுத்துக் கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் புற்றுநோய் ஏற்படுகிறது. தொடா் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால், மருத்துவரை அணுகி புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தொடக்தத்திலேயே புற்றுநோயை கண்டறிந்தால் சிகிச்சை மூலம் சரி செய்து விடலாம் என்றாா் அவா்.
தொடா்ந்து மருத்துவமனைக்கு வந்த 95 பேருக்கு புற்றுநோய் சோதனை நடத்தப்பட்டு, தேவைப்பட்டவா்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…