State

பிளாஸ்டர் ஆஃப் பாரிஸால்  தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை விற்கத் தடை – ஐகோர்ட் உத்தரவு | Ban on sale of Vinayagar idols made by Plaster of Paris: HC quashes single judge order

பிளாஸ்டர் ஆஃப் பாரிஸால்  தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை விற்கத் தடை – ஐகோர்ட் உத்தரவு | Ban on sale of Vinayagar idols made by Plaster of Paris: HC quashes single judge order
பிளாஸ்டர் ஆஃப் பாரிஸால்  தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை விற்கத் தடை – ஐகோர்ட் உத்தரவு | Ban on sale of Vinayagar idols made by Plaster of Paris: HC quashes single judge order


மதுரை: பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் முலம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை விற்பனை செய்யலாம் என தனி நீதிபதி பிறப்பத்த உத்தரவுக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளையின் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

வழக்கு என்ன? நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த பிரகாஷ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “எனது சொந்த மாநிலம் ராஜஸ்தான். அங்கிருந்து 20 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்துடன் பாளையங்கோட்டை வந்தோம். பாளையங்கோட்டையில் கிருபாநகரில் வாடகை இடத்தில் களிமண், கலர் பவுடர் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதிக்கும் பொருட்களை பயன்படுத்தி கடவுள் சிலைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். விநாயகர் சதுர்த்தியின் போது சனாதனம் மீது நம்பிக்கையுள்ளவர்கள் போலீஸார் அனுமதிக்கும் இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடுவது வழக்கம். விநாயகர் சதுர்த்தி காலத்தில் விநாயகர் சிலைகள் அதிகளவில் விற்பனையாகும். கடந்தாண்டு வரை விநாயகர் சிலை விற்பனைக்கு யாரும் இடையூறு ஏற்படுத்தவில்லை. இந்தாண்டு சிலை தயாரிப்பு தொழிலுக்காக வெளி நபர்களிடம் இருந்து ரூ.12 லட்சம் கடன் பெற்று தொழிலில் முதலீடு செய்துள்ளேன். கடந்த 3 வாரங்களாக சிலை தயாரிப்பு முழு வீச்சில் நடைபெற்றுள்ளது. செப். 15 முதல் விநாயகர் சிலை விற்பனை தொடங்கியுள்ளது.

இந்நிலையில் பாளையங்கோட்டை போலீஸாரும், வருவாய் அதிகாரிகளும் எங்கள் இடத்துக்கு வந்து விநாயகர் சிலைகளை யாருக்கும் விற்கக்கூடாது என உத்தரவிட்டதுடன், சிலை வாங்க வந்தவர்களையும் விரட்டியடித்தனர். இதுகுறித்து கேட்தற்கு, பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்ற ரசாயனம் கலந்து தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுவதால், அந்த சிலைகளைக் கரைத்தால் நீர் நிலைகள் மாசடையும் என்பதால் விநாயகர் சிலைகளை விற்க அனுமதி மறுத்ததாக போலீஸார் தெரிவித்தனர். நான் தயாரித்துள்ள சிலைகளால் நீர் நிலைகளில் மாசு ஏற்படாது. இது குறித்து போதுமான விளக்கம் அளித்தும் விற்பனைக்கு அனுமதிக்கவில்லை. எனவே, விநாயகர் சிலைகள் விற்பனை தொழிலில் தலையிடக்கூடாது, தடுக்கக்கூடாது என நெல்லை மாவட்ட ஆட்சியர், நெல்லை மாநகர் காவல் ஆணையர், பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கலந்த விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய அனுமதி: இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், “நீர் நிலைகளில் சிலைகளை கரைப்பது தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளது. அந்த வழிகாட்டுதல்கள் சிலை விற்பனைக்கு தடையாக இருக்கக்கூடாது. சிலைகள் சுற்றுச்சூழல் சார்புடையதாக இருந்தால் அதை தயாரிக்கவும், விற்கவும் தடை விதிக்க முடியாது. மனுதாரர் அனுமதிக்கப்பட்ட அளவில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார். இந்த சிலைகளை வாங்குபவர்கள் வீடுகள், கோயில்கள், திருமண மண்டபங்களில் வைக்கலாம். பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க அனுமதிக்க முடியாது. அந்த சிலைகள் விற்கப்படுவதை அதிகாரிகள் தடுக்க முடியாது. இதில் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பது தொடர்பான விதிகள் மீறப்படவில்லை.

மனுதாரர் தன்னிடம் சிலைகள் வாங்கும் நபர்களின் விபரங்களை பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு சிலை விற்பனையும் கணக்கில் வைக்கப்பட வேண்டும். இதற்காக மனுதாரர் தனி பதிவேடு பராமரிக்க வேண்டும். இந்த பதிவேட்டை அதிகாரிகள் ஆய்வு செய்யலாம். எந்த சூழ்நிலையிலும் தாமிரபரணி அல்லது பிற நீர் நிலைகளில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளை கரைக்க அனுமதிக்க முடியாது. சிலைகளை கரைக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நியாயமானவை. அதே நேரத்தில் சிலை விற்பனையை தடுப்பது அடிப்படை உரிமை மீறலாகும். எனவே மனுதாரரின் சிலை விற்பனையை அதிகாரிகள் தடுக்கக்கூடாது” என்று உத்தரவிட்டிருந்தார்.

மேல்முறையீடு: இந்நிலையில், தனி நீதிபதியின் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் துறை வகுத்துள்ள விதிமுறைகளுக்கு எதிராக பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கொண்டு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய தடை விதிக்க முடியாது எனக்கூறி விற்பனைக்கு அனுமதி வழங்கி தனிநீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். விநாயகர் சிலைகள் கரைப்பு தொடர்பாக ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் துறை பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. அதில் விநாயகர் சிலைகளை இயற்கையான களிமண்ணால் செய்திருக்க வேண்டும். சுற்றுச்சூழலை மாசு படுத்தக்கூடிய நச்சு வேதிப்பொருட்கள் மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்ற மூலப் பொருட்கள் கலந்து செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை விற்கவும், நீர் நிலைகளில் கரைக்கவும் அனுமதி இல்லை என தெளிவாக கூறியுள்ளது.

மனித உடல் நலத்துக்கு கேடு விளைவிக்க கூடிய பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் விற்பனை செய்வதற்குமே தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலை தயாரிக்கக் கூடிய நிறுவனம் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற்று இருக்க வேண்டும். அனுமதி பெறும்போது எத்தனை சிலைகள் தயாரிக்கப்படுகிறதோ, அத்தனை சிலைகளுக்கான வைப்புத்தொகை செலுத்தப்பட வேண்டும். விதிமுறைகளை மீறி நச்சுப் பொருட்கள் பயன்படுத்துவது தெரிந்தால் வைப்புத்தொகை பறிமுதல் செய்யப்படும். சிலை தயாரிப்பதற்கான உரிமமும் ரத்து செய்யப்படும் என விதிகள் உள்ளன. ஆனால் மனுதாரர் எவ்வித உரிமமும் பெறவில்லை. ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் துறையின் வழிமுறைகளை மனுதாரர் முற்றிலும் மீறி சிலைகள் தயாரித்துள்ளார். இதை தனி நீதிபதி கவனத்தில் கொள்ளவில்லை. எனவே தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.

அவசர வழக்காக விசாரணை: இந்த மேல்முறையீட்டு வழக்கு அவசர வழக்காக விடுமுறை நாளான இன்று, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன், “ஒன்றிய அரசின் மாசு கட்டுபாட்டு வாரிய விதிமுறைகளுக்கு எதிராக மனு தாரர் விநாயகர் சிலைகளை தயாரித்துள்ளார். மேலும் சிலைகள் தயாரிப்பதற்காக எந்தவித அனுமதியையும் உள்ளட்சி நிர்வாகத்திடம் மனுதாரர் வாங்க வில்லை. இது முற்றிலும் ஒன்றிய அரசின் விதிமுறைகளுக்கு எதிராக உள்ளது” என்று வாதிட்டார்.

தனிநீதிபதி உத்தரவுக்கு தடை: இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், “பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் முலம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கக் கூடாது என்று, ஏற்கெனவே பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தான் ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதிமுறைகளை வகுத்துள்ளது. அந்த விதமுறைகளை ஏன் சிலை தயாரிப்பாளர்கள் பின்பற்றுவதில்லை? 15 ஆண்டுகளுக்கு முன்பே நச்சு பொருட்கள் கலந்து சிலைகள் செய்யக்கூடாது என நீதிமன்ற உத்தரவுகள் உள்ளன. இது குறித்து ஏன் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை? மேலும், ரசாயனம் கலந்த சிலைகளை நீர் நிலைகளில் கலப்பதால் புற்று நோய் அதிக அளவில் ஏற்படுகிறது. விஷம் என்பதில் ஒரு துளி விஷம், அதிகம் என்பதெல்லாம் இல்லை எல்லாமே விஷம் தான். அமோனியம், மெர்குரி போன்று பிளாஸ்டர் ஆப் பாரிஸும் நச்சு பொருள்தான். எனவே, பிளாஸ்டர் ஆப் பாரிஸ் முலம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை விற்பனை செய்யலாம் என தனி நீதிபதி பிறப்பத்த உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது” என தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *