லண்டன்: பிரிட்டன் அரசு மற்றும் டாடா ஸ்டீல் நிறுவனம் இடையே 1.25 பில்லியன் பவுண்ட் (ரூ.12,800 கோடி) முதலீட்டு ஒப்பந்தம் நேற்று முன்தினம் கையெழுத்தானது.
பிரிட்டனின் சவுத் வேல்ஸ் பிராந்தியத்தில் போர்ட் டால்போல்ட் பகுதியில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் உருக்கு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் 8,000 பேர் பணியாற்றி வருகின்றனர். கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்க அந்த ஆலையை நவீனப்படுத்த வேண்டிய சூழலில் டாடா ஸ்டீல் நிறுவனம் உள்ளது. இதற்காக அந்நிறுவனம் பிரிட்டன் அரசின் நிதி உதவியை கோரியது.
இந்நிலையில், பிரிட்டன் அரசு மற்றும் டாடா ஸ்டீல் இடையே ரூ.12,800 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன்படி, ரூ.5,100 கோடியை பிரிட்டன் அரசும் மீதத் தொகையை டாடா ஸ்டீல் நிறுவனமும் முதலீடு செய்யும்.
இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், “பிரிட்டனின் வேலைவாய்ப்புகளை பாது காப்பதற்காகவும், உருக்கு துறையின் வளர்ச்சியை உறுதி செய்வதற்காகவும் டாடா ஸ்டீல் நிறுவனத்துடன் 1.25 பில்லியன் பவுண்ட் மதிப்பில் முதலீட்டு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம். பிரிட்டன் உருக்கு துறையில் இது ஒரு முக்கியமான நாள்” என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டாடா குழுமத்தின் தலைவர் என். சந்திரசேகரன் கூறுகையில், “உருக்கு துறையின்போக்கில் முக்கிய திருப்புமுனையாக இந்த ஒப்பந்தம் இருக்கும்.பசுமை தொழில்நுட்ப அடிப்படையிலான வளர்ச்சிக்கு இது வழிவகுக்கும்” என்றார்.