புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று 73வது பிறந்த நாள். இதை முன்னிட்டு குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், “பிரதமர் நரேந்திர மோடிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள். இந்த அமிர்த காலத்தில் உங்களின் தொலைநோக்குப் பார்வையாலும் வலுவான தலைமையாலும் இந்தியா ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சி காண வேண்டும். நீங்கள் எப்போதும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கவும், உங்கள் அற்புதமான தலைமைத்துவத்தால் நாட்டு மக்களுக்கு தொடர்ந்து பயன் அளிக்கவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். உங்களது தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையும், சமூக நல மனப்பான்மையும், முன்மாதிரியான செயலாக்கமும், பாரதத்தை மகத்தான முன்னேற்றத்திற்கும், சகாப்த மாற்றத்திற்கும் இட்டுச் சென்றுள்ளன. உங்கள் மாண்பு, நம் நாட்டின் வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது. மனிதகுலத்தின் ஆறில் ஒரு பங்கைக் கொண்ட பாரதம், நமது நாகரிக நெறிமுறைகளுடன் ஒத்திசைந்து, பொது நலன் மற்றும் தொலைநோக்குப் பார்வைக்கான உங்கள் அர்ப்பணிப்பை எப்போதும் மதிக்கும். இனிவரும் காலங்களில் பாரதத்திற்கு சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவனால் உங்களுக்கு நல்ல ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் கிடைக்கட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், பிரதமர் நரேந்திர மோடி நவீன இந்தியாவின் சிற்பி என புகழ்ந்துள்ளார். “பாரம்பரியத்தின் அடிப்படையில் நமது நாடு மிகப் பெரிய தற்சார்புடன் விளங்குவதற்கான அடித்தளத்தை பிரதமர் மோடி ஏற்படுத்தி உள்ளார். கட்சி அமைப்பாக இருந்தாலும் அரசு அமைப்பாக இருந்தாலும் நாட்டின் நலனுக்கே மிகப் பெரிய முன்னுரிமை கொடுப்பவராக மோடி விளங்குகிறார். அவரது தலைமையின் கீழ் பணிபுரிவது மிகப் பெரிய பாக்கியம்” என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “இந்தியாவுக்கு புதிய அடையாளத்தை மட்டும் அவர் கொடுக்கவில்லை. உலக அரங்கில் இந்தியாவுக்கு மிகப் பெரிய கவுரவத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். இந்தியாவின் வளர்ச்சியை மிகப் பெரிய உயரத்துக்கு அவர் கொண்டு சென்றிருக்கிறார். ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் அவர் வாழ வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள். அவர் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க. ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.