புதுச்சேரி: புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள ஊசுட்டேரி தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளை உள்ளடக்கி உள்ளது. 850 ஹெக்டேரில் பரந்து விரிந்து இந்த ஏரி உள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பறவைகள் இனப்பெருக்கத்துக்காக நவம்பர் மாதம் முதல் ஊசுட்டேரிக்கு வருகை தருகின்றன. இதனால், பறவைகள் சரணாலயமாகவும் ஊசுட்டேரி அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஏரியில் புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் படகு குழாம் இயங்கி வருகிறது. இதற்காக அங்கு இன்ஜின் படகுகள், பெடல் படகுகள் விடப்பட்டுள்ளன. அதே நேரத்தில் படகு குழாம் போதிய கண்காணிப்பு இல்லாமல் உள்ளது.
இங்கு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் தாங்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் போன்றவற்றை தூக்கி எறிந்துவிட்டு செல்கின்றனர். இதனால் இந்த அழகிய பகுதி சீர்கேடு அடைகிறது. படிப்படியாக ஏரியின் அழகு பொலிவிழக்கும் சூழல் உருவாகி வருகிறது.
இது பற்றி சுற்றுலா வளர்ச்சிக் கழக பணியாளர் கள் தரப்பில் விசாரித்தபோது, “படகு குழாம் தூய்மையாக பராமரிக்கப்படுகிறது. இருப்பினும் இங்கு வரும் சிலர் பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகளை தூக்கி வீசிவிட்டு செல்கின்றனர். படகு குழாம் முகப்பிலேயே புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் சார்பில், ‘ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் அருகிலேயே குப்பைத் தொட்டிகளும் உள்ளன.
இதனை யாரும் பொருட்படுத்துவதில்லை. இஷ்டத்துக்கு தூக்கி எறிகின்றனர். ‘பிளாஸ்டிக் பொருட்களை வீச வேண்டாம்’ என்று நாங்கள் பலமுறை அறிவுறுத்தியுள்ளோம். ஆனாலும் கேட்பதில்லை. அரசு தீவிர நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதைத் தடுக்க முடியும்” என்கின்றனர். அதே நேரத்தில் இங்கு வருவோர், “சுற்றுலா வரும் எங்களுக்கு போதிய குடிநீர் வசதிகள், கழிப்பிட வசதிகள் இல்லை. இதனால் வெளியில் இருந்து குடிநீர் பாட்டில்கள் எடுத்து வர வேண்டியுள்ளது” என்று தெரிவிக்கின்றனர்.
சுற்றுலா பயணிகள் கூறும் குறைகள் களையப்பட வேண்டியது அவசியம். அதே நேரத்தில், அரசு ஒரு விஷயத்தை நல்ல முறையில் எடுத்துச் சென்றால், அதைச் சரியாக பேணும் சமூக பொறுப்பு நமக்கும் இருக்க வேண்டும் என்பதையே ஊசுட்டேரி சுற்றுச்சூழல் நமக்கு உணர்த்துகிறது.