கோவை: பாரத் கவுரவ் சிறப்பு ரயில் மூலம் ஆக்ரா, அமிர்தசரஸ் சுற்றுலா செல்ல கோவை ஐஆர்சிடிசி அலுவலகத்தில் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி) வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ஐ.ஆர்.சி.டி.சி-யானது ரயில், விமானம் மூலம் பல்வேறு சுற்றுலாக்களை வெற்றிகரமாக ஏற்பாடு செய்து வருகிறது.
இந்நிலையில், வரும் ஜூலை 1-ம் தேதி பாரத் கவுரவ் சிறப்பு சுற்றுலா ரயில் ‘வைஷ்ணவ தேவி யாத்திரை’ என்ற பெயரில் கொச்சுவேலியில் இருந்து புறப்பட்டு நாகர்கோவில், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர் வழியாக செல்லும்.
இதன் மூலம் ஹைதராபாத், ஆக்ரா, மதுரா, வைஷ்ணவ தேவி (கட்ரா), அமிர்தசரஸ், டெல்லி போன்ற இடங்களில் உள்ள சிறப்பு மிக்க சுற்றுலா தலங்களை கண்டு மகிழ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 11 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலாவுக்கு, குளிர்சாதன வசதி இல்லாத படுக்கை வசதி கொண்ட பெட்டியில் பயணிக்க ரூ.22,350, மூன்றாம் வகுப்பு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டியில் பயணிக்க ரூ.40,380 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதில், ரயில் கட்டணம், தங்கும் வசதி, உள்ளூர் போக்குவரத்து, தென்னிந்திய உணவு, சுற்றுலா மேலாளர், தனியார் பாதுகாவலர் வசதி, ஜிஎஸ்டி ஆகியவை அடங்கும். மத்திய, மாநில அரசு ஊழியர்கள் எல்டிசி சலுகைகளை பெறலாம்.
இந்த சுற்றுலா தொடர்பான கூடுதல் விவரங்கள் பெறவும், முன்பதிவுக்கும் ஐ.ஆர்.சி.டி.சி கோவை அலுவலகத்தை 90031 40655 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.irctctourism.comஎன்ற இணையதளத்தில் விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.