
மதுரை: ‘பாரத் கவுரவ் ’ உலா ரயில் செப்.28-ல் மதுரையில் இருந்து புறப்படுகிறது என ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
பயணிகள் தங்களுக்கு விருப்பமான பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் வகையில் மத்திய ரயில்வே ‘ பாரத் கவுரவ் ரயில் ’களை இயக்குகிறது. இதன்படி, மதுரையில் செப்.28-ம் தேதி உலா ரயில் பயணத்தை தொடங்குகிறது.
திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், ஒட்டப்பாலம், பாலக்காடு, போத்தனூர் ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக செப்.30-ம் தேதி ஹைதராபாத் சென்றடைகிறது. அங்கு சார்மினார், கோல் கொண்டா கோட்டை மற்றும் சாலார் ஜங் அருங் காட்சியகம் ஆகியவற்றை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்ட பிறகு, அடுத்த நாள் ராமோஜிராவ் பிலிம் சிட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவர்.
மேலும், அங்கிருந்து ஹைதராபாத், அவுரங்காபாத், எல்லோரா, அஜந்தாவுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். தொடர்ந்து அக். 3 மற்றும் 4-ம் தேதிகளில் லோக்மான்ய திலக் சென்றடையும். பிறகு மும்பை நகரில் சுற்றுப்பயணம் – ஜூஹூ கடற்கரையில் தொடங்கி, தொங்கும் தோட்டங்கள், இந்தியாவின் நுழைவாயில், பாந்த்ரா பாலம் ஆகியவற்றை காண ஏற்பாடு செய்யப்படும்.
அக்.5-ம் தேதி மாலை மாண்டோவி ஆற்றுக்கு அழைத்துச் செல்லப்படுவர். யாராவது ஆர்வமாக இருக்கும் பட்சத்தில் அக்.6ம் தேதி மட்கானிலிருந்து கலங்குட் கடற்கரை மற்றும் கதீட்ரலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மீண்டும் மங்களூரு காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம், கொல்லம், திருவனந்தபுரம் வழியாக நெல்லை திரும்ப ஏற்பாடு செய்யப்படும்.
இந்த சுற்றுலாவில் பங்கேற்க விரும்புவோர் www. railtourism.com-ல் தெரிந்து கொள்ளலாம். மேலும், விவரம் அறிய 9677011585 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.