பொள்ளாச்சி: ஆனைமலை புலிகள் காப்பகம் அரிய விலங்குகளின் இருப்பிடம் மட்டுமின்றி, பல சிற்றருவிகளின் பிறப்பிடமாகவும் விளங்குகிறது. அதில் முக்கியமானது கவியருவி. குரங்கு அருவி என அழைக்கப்பட்டு வந்த இதன் பெயரை சில ஆண்டுகளுக்கு முன்பு கவியருவி என வனத்துறையினர் மாற்றம் செய்தனர்.
சங்க காலத்தில் குரங்குகள் ‘கவி’ எனும் பெயரில் அழைக்கப்பட்டு வந்ததை நினைவுகூரும் வகையில், பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கும் போது, தமிழ்நாட்டின் எல்லையில் கேரளாவுடன் உரசிக் கொண்டிருக்கும் ஆனைமலை குன்றுகளில் மழை பெய்ய ஆரம்பித்துவிடும்.
அதில், வால்பாறை பகுதியில் பெய்யும் மழைநீர், வனப்பகுதியில் பல நீரோடைகளாக உருவெடுத்து, மூலிகைச் செடிகளில் மோதி காடுகள் வழியாக பொள்ளாச்சி–வால்பாறை சாலை ஆழியாறு வனப்பகுதியில் பாறைகள் மீது விழுந்து அருவியாக கொட்டுகிறது. இந்த அருவி நீர் உடலையும், மனதையும் ஒருங்கே குளிர்வித்துக் கொண்டிருக்கும் இயற்கை அதிசயம்.
கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை உச்சத்தில் இருக்கும் போது ஓயாத சாரலுடனும், பலத்த காற்றுடனும் மழைநீர் பெருக்கெடுத்து, சுமார் 80 அடி உயரத்தில் இருந்து கவியருவி கொட்டுகிறது. தென்மேற்கு பருவமழை காலத்தில் வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள், கவியருவியில் மிதமான வேகத்தில் கொட்டும் நீரில் குளித்து அனுபவிக்காமல் வால்பாறை செல்வதில்லை.
இந்த அருவி நீர் பல்வேறு மூலிகைகளை தொட்டு வருவதால், உடலுக்கு நன்மை தருவதாக சுற்றுலா பயணிகள் கூறுகின்றனர். இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கவியருவிக்கு வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு அருவி பகுதியில் வனத்துறை சார்பில் படிக்கட்டுகள், உடைமாற்றும் அறை, பாறைகளில் ஓவியம் என பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் செய்யப்பட்டன.
மேலும், குரங்குகளின் சிற்பங்களை வடிவமைத்து, அதில், ஐங்குறுநூறு, அகநானூறு உள்ளிட்ட சங்க இலக்கியங்களில் குரங்குகள் குறித்து பாடப்பட்டுள்ளதை கல்வெட்டாக வடித்துள்ளனர். அருவி அருகில் உள்ள பாறைகளில் புலி, மான், வரையாடுகள் ஆகியவை புடைப்பு சிற்பம் மற்றும் ஓவியங்களாக வரையப் பட்டுள்ளன.
வழுக்கும் பாறை: கவியருவிக்கு செல்ல, நபருக்கு ரூ.50 கட்டணமாக வனத்துறையினர் வசூலிக்கின்றனர். மேலும், வாகன நிறுத்த கட்டணம் தனியாக வசூலிக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவியில் தண்ணீர் விழும் இடங்களில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு கம்பிகள், கனமழை காலத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அதன்பின்னர் மரக்குச்சிகளை கொண்டு தற்காலிக தடுப்புகளை அமைத்துள்ளனர்.
அருவியில் தண்ணீர் கொட்டும் இடத்தில் தரை வழுக்கும் நிலையில் உள்ளதால், முதியவர்கள், குழந்தைகள் வழுக்கி விழுந்து காயமடைகின்றனர். அருவியிலிருந்து சில மீட்டர் தொலைவில் குளம்போல தண்ணீர் தேங்கி, பின்னர் நீரோடையாக மாறி ஆழியாறு அணையில் கலக்கிறது.
அருவி பகுதியில் தண்ணீர் தேங்கி இருக்கும் இடத்தை குழந்தைகள் குளிப்பதற்கான குளமாக மாற்றவும், அருவியின் தரைப் பகுதியில் குற்றாலம் அருவியில் உள்ளதுபோல கான்கிரீட் தளம்,நிரந்தரமான தடுப்பு கம்பிகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆழியாறு ‘கவியருவி’ சிறந்த சுற்றுலா மையமாக மாற்றப்பட வேண்டும்.
அருவியில் குளிக்க வருபவர்கள் வீசி செல்லும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் உடைகளால் வனப்பகுதியின் சூழல் கெடாமல் இருக்க, பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.