பெங்களூரு: “மக்களவைத் தேர்தலில் பாஜக – மஜத இடையே கூட்டணி இன்னும் முடிவாகவில்லை” என பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா திடீரென மறுப்பு தெரிவித்துள்ளார்.
கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா இரு தினங்களுக்கு முன்பு, “வருகிற மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் பாஜகவும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மஜதவும் கூட்டணி அமைத்து போட்டியிடும். இதில் மஜதவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒப்புதல் வழங்கியுள்ளார்” என தெரிவித்தார். இதற்கு முன்னாள் முதல்வரும் மஜத மூத்த தலைவருமான குமாரசாமி, “பாஜக தலைவர்களுடன் மரியாதை நிமித்தமாக உரையாடியுள்ளேன். கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டவில்லை. தொகுதிகள் ஒதுக்கீடு கூறியது எடியூரப்பாவின் தனிப்பட்ட கருத்து” என விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் எடியூரப்பா, “பாஜக, மஜத கூட்டணி இன்னும் முடிவாகவில்லை. பிரதமர் நரேந்திர மோடியும், அமைச்சர் அமித் ஷாவும் இதில் இறுதி முடிவெடுப்பார்கள். இந்த வாரத்தில் கூட்டணி குறித்து மஜத தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்” என விளக்கம் அளித்துள்ளார்.
இதனிடையே, முன்னாள் பிரதமர் தேவகவுடா, “பிரதமர் நரேந்திர மோடி என் மீது மரியாதை வைத்துள்ளார். மஜதவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக என்னிடம் பேசினார். மஜத எந்தெந்த தொகுதிகளில் பலமாக இருக்கிறது என அவரிடம் விவரித்தேன். தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து எதுவும் பேசவில்லை. இந்த கூட்டணி குறித்து குமாரசாமி முடிவெடுப்பார். அவர் விரைவில் மோடியை சந்தித்து பேசுவார்” என்றார்.