இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்ட அன்வாருல் ஹக் காதர் இன்று பதவியேற்றார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அந்நாட்டின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இதையடுத்து, நாடாளுமன்றத் தேர்தலை இடைக்காலப் பிரதமர் தலைமையிலான அரசு நடத்துவதற்கேற்ப, கடந்த சனிக்கிழமை இடைக்காலப் பிரதமராக அன்வாருல் ஹக் காதர் தேர்வு செய்யப்பட்டார். பிரதமர் பதவியில் இருந்த ஹெபாஸ் ஷெரீப், எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்த ராஜா ரியாஸ் ஆகியோர் மிக நீண்ட ஆலோசனைக்குப் பிறகு நாட்டின் இடைக்காலப் பிரதமராக அன்வாருல் ஹக் காதரை தேர்வு செய்தனர்.
இதையடுத்து, பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக அன்வாருல் ஹக் காதர் இன்று (ஆகஸ்ட் 14) பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் ஆரிப் ஆல்வி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில், ஷபாஸ் ஷெரீப், மக்களவை முன்னாள் சபாநாயகர் ராஜா பர்வேஸ் அஷ்ரப், மாநிலங்களவை தலைவர் சாதிக் சஞ்ச்ரானி, சிந்து, பஞ்சாப், கைபர் பக்துன்வா மாநிலங்களின் ஆளுநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன்மூலம், பாகிஸ்தானின் 8வது இடைக்கால பிரதமர் என்ற பெருமையை அன்வாருல் ஹக் காதர் பெற்றுள்ளார்.
முன்னதாக, தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும், பலுசிஸ்தான் அவாமி காட்சியின் தலைவர் பதவியையும் அன்வாருல் ஹக் காதர் ராஜினாமா செய்தார். நாடாளுமன்றத் தேர்தலை நேர்மையுடனும் நடுநிலையுடனும் நடத்துவேன் என உறுதி அளித்துள்ள அன்வாருல் ஹக் காதர், அதன் பொருட்டே இந்த பதவிகளை ராஜினாமா செய்ததாகக் கூறினார்.
அன்வாருல் ஹக் காதர் யார்? – பலுசிஸ்தான் மாகாணத்தின் கிலா சைஃபுல்லா பகுதியைச் சேர்ந்தவர் அன்வாருல் ஹக் காதர். அரசியல் பின்புலம் இல்லாத நடுத்தரக் குடும்பத்தில் 1971ம் ஆண்டு மே 15ம் தேதி பிறந்த இவர், முதுகலைப் பட்டப் படிப்பு முடித்தவர். சட்டம் படிக்க இங்கிலாந்து சென்ற இவர், பாதியிலேயே தாயகம் திரும்பினார். தாய்மொழியான பஷ்டு மொழியோடு, ஆங்கிலம், பெர்ஷியன், பலூச்சி, பிராவி, உருது ஆகிய மொழிகளில் சரளமாகப் பேசக்கூடியவர். 2008ல் PML-Q கட்சியில் இணைந்த அன்வாருல் ஹக் காதர், பின்னர் PML-N கட்சியில் சேர்ந்தார். இதனைத் தொடர்ந்து பலுசிஸ்தான் அவாமி காட்சியை இவர் தொடங்கி உள்ளார்.