
பொன்னேரி: தொன்மைக்கு சான்றாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்கும் பழவேற்காட்டில் பேருந்து நிலையம் இல்லாததால் சுற்றுலா பயணிகள், மீனவ மக்கள் பல்வேறு இன்னலுக்குள்ளாகி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள கடலோர கிராமமான பழவேற்காடு. மெட்ராஸ் உருவாவதற்கு முன்பே உருவான வரலாற்று சிறப்பு மிக்கது.
இக்கிராமம், போர்ச்சுக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் விட்டுப்போன, ஜெல்டிரியா கோட்டை, லேடி ஆஃப் குளோரி தேவாலயம், டச்சுக் கல்லறை, புனித மகிமை மாதா தேவாலயம் உள்ளிட்ட வரலாற்றுச் சுவடுகள் கொண்டு தொன்மைக்கு சான்றாக விளங்குகிறது பழவேற்காடு.
இங்கு, இந்தியாவின் 2-வது பெரிய உப்புநீர் ஏரி, வங்காள விரிகுடாவின் முகத்துவாரம், ஆலா, பூ நாரைகள், கூழைக்கடா, செங்கிளுவை, சாம்பல் நாரை, உள்ளிட்ட 150 வகையான பறவைகள் குவியும் பறவைகள் சரணாலயம், பழமையான ஆதிநாராயணப் பெருமாள் கோயில், சமயேஸ்வரர் கோயில் மற்றும் சூரிய ஒளி கடிகாரம் நிறுவப்பட்டுள்ள சின்ன பள்ளிவாசல், கலங்கரை விளக்கம் உள்ளிட்டவையும் உள்ளன.
பழவேற்காடு மற்றும் அதனையொட்டி லைட்ஹவுஸ் குப்பம், அரங்கம்குப்பம் உள்ளிட்ட 53 மீனவ கிராமங்களில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பழவேற்காடு ஏரி மற்றும் கடற்பகுதியில் 160 வகையான மீன்களும், 12 வகையான இறால்களும் கிடைக்கின்றன. பழவேற்காட்டுக்கு சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திரளான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல், பழவேற்காடு மீன் சந்தைக்கு விடுமுறை தினங்களில், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வருகை தந்து மீன்வகைகளை வாங்கி செல்கின்றனர். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பழவேற்காட்டில் பேருந்து நிலையம் இல்லாததால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் வெயில், மழையில் மீனவ மக்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர் நாள்தோறும் தவிக்கின்றனர்.

இதுகுறித்து, சமூக ஆர்வலரான ராமு கூறும்போது, ‘‘பழவேற்காட்டுக்கு, செங்குன்றம், பொன்னேரி, மீஞ்சூர், திருவள்ளூர், சென்னை – டோல்கேட் உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் 30-க்கும் மேற்பட்ட அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகள், தனியார் பேருந்துகள் வந்து சென்று வருகின்றன.
அவ்வாறு பழவேற்காடுக்கு வந்து செல்லும் பேருந்துகள், பேருந்து நிலையம் இல்லாததால், பழவேற்காடு பஜார் பகுதியில் சாலையிலேயே நிற்கின்றன. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலிலும், வெயில் மற்றும் மழையிலும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் சிக்கித் தவிக்கின்றனர்’’ என்றார்.

தமிழ்நாடு மீனவ சங்க மாநில தலைவரான துரை. மகேந்திரன் கூறியதாவது: பழவேற்காட்டில் பேருந்து நிலையம் இல்லாததால், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு, பழவேற்காட்டிலிருந்து, சென்னை- வள்ளலார் நகர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வந்தபல பேருந்துகள் நிறுத்தப்பட்டன. அதேபோல், அதிகாலை 5 மணியளவில், பழவேற்காட்டில் இருந்து பொன்னேரிக்கு சென்று வந்த பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பலதரப்பட்ட மக்களும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
பழவேற்காடு பகுதியில் உள்ள மீனவ மக்களும், சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அத்தியாவசிய காரணங்களுக்கு செல்லும்போது நெரிசலில் சிக்கி நேரத்துக்கு செல்ல முடியாத நிலையில் தவிக்கின்றனர். இதுகுறித்து, முதலமைச்சர் சிறப்பு பிரிவு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்டவைகளில் பல முறை மனு அளித்தும் தீர்வு காணப்படவில்லை. ஆகவே, பேருந்து நிலையம் அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.
இதுகுறித்து, மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ’’ பழவேற்காட்டில் பேருந்து நிலையம் அமைப்பதற்கு திட்ட மதிப்பீடு தயாரித்து, அரசின் அனுமதிக்கு அனுப்பியுள்ளோம். அரசின் அனுமதி கிடைத்தவுடன் பழவேற்காட்டில் பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடங்கி, துரிதமாக முடிக்கப்படும்’’ என்றார்.