இஸ்லாமாபாத்: அரசு கருவூலப் பரிசுப் பொருட்கள் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு கருவூலப் பரிசுப் பொருட்களை முறைகேடாக விற்பனை செய்தது தொடர்பாக இம்ரான் கான் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்த இஸ்லாமாபாத் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம், அவரை குற்றவாளி என அறிவித்தது. இந்த வழக்கில் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையடுத்து, லாகூரில் உள்ள தனது வீட்டில் இருந்த இம்ரான் கான் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்த தீர்ப்பை அடுத்து, தண்டனைக் காலம் முடிந்து பின் 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட அவர் தகுதி இழந்துவிட்டதாக அந்நாட்டு சட்ட நிபுணர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், தனக்கு எதிராக விதிக்கப்பட்ட இந்த தண்டனையை எதிர்த்து இம்ரான் கான் தரப்பில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஆமெர் ஃபரூக், நீதிபதி தாரிக் மெகமூத் ஜஹாங்கிரி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தது. அதில், மாவட்ட செஹஷன்ஸ் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. மேலும், இம்ரான் கானை ஜாமீனில் விடுவிக்குமாறு சிறைத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
எனினும், இம்ரான் கான் ரகசிய காப்புப் பிரமாணத்தை மீறியதாகத் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால் அவர் சிறையிலேயே இருப்பார் என டான் பத்திரிகை தெரிவித்துள்ளது. பிரதமராக இருந்த இம்ரான் கானின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு ரகசிய ஆவணம் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அது அமெரிக்காவின் நாளிதழ் ஒன்றில் வெளியானது. இதையடுத்து, இம்ரான் கான் மற்றும் அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெகமூத் குரோஷி ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.