
புதுடெல்லி: உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு பரபரப்பான வழக்குகளை மட்டுமே விசாரிக்கும், சாமானியர்களின் அன்றாட வாழ்க்கை தொடர்பான வழக்குகளை விசாரிக்காது என்று நினைப்பது தவறு என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியுள்ளார்.
மேலும், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரித்து வந்ததை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி, அந்த வழக்கு விசாரணையின்போது தேசத்தின் குரலையும் கேட்டதாகக் கூறினார்.
உச்ச நீதிமன்ற நீதிபதி மேத்யூஸ் நெடும்பாரா அண்மையில் உச்ச நீதிமன்ற தலைமைச் செயலருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் அவர், “உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரணைகள் நேர விரயம் மாறாக உச்ச நீதிமன்றம் பொதுநல மனுக்கள் மீது கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறியிருந்தார். இதற்குப் பதிலளித்துள்ள தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், “சட்டப்பிரிவு 370 ரத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அரசியல் சாசன அமர்வு விசாரித்தது நேர விரயம் என்று நீங்கள் கருதலாம். ஆனால், இந்த வழக்கின் மனுதாரர்களும், அரசாங்கமும் அவ்வாறு கருதவில்லை. அரசியல் சாசன அமர்வு விசாரணைகள் அனைத்துமே அரசியல் சாசனத்தை பகுப்பாய்வு செய்கிறது என்று அர்த்தமில்லை.
நேற்று முன்தினம் நீங்கள் விசாரணையின்போது நீதிமன்றத்துக்கு வந்திருந்தால் நாட்டில் ஆயிரக்கணக்கான ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைத் தொடும் பிரச்சினை விவாதிக்கப்பட்டது. இலகு ரக வாகன மோட்டார் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு வர்த்தக வாகனங்களையும் இயக்கலாமா என்ற வழக்கை விசாரித்தோம். ஆகையால் உச்ச நீதிமன்றம் பரபரப்பான அரசியல் சாசன விவகாரங்களை மட்டுமே விசாரிக்கின்றது, சாதாரண மக்களைக் கண்டு கொள்வதில்லை என்ற உங்களின் எண்ணம் தவறானது” என்றார்
சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பாரா, நீதிமன்ற நியமனங்களுக்கான கொலீஜியம் அமைப்பினை கடுமையாக சாடி கவனம் பெற்றவராவார்.