சான் பிரான்சிஸ்கோ: இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பல்வேறு தளங்களில் உலாவும் பயனர்களின் பாதுகாப்புக்கு பல்வேறு நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றன. அந்த வகையில் ஐரோப்பிய யூனியன் வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் டிஜிட்டல் சேவைகள் சட்டத்தை ஐரோப்பாவில் நடைமுறைக்கு கொண்டு வர உள்ளது. இதன் மூலம் சமூக வலைதளங்களில் வெறுப்பு பேச்சு, தவறான தகவலை பகிருதல் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் விஷயங்களை கட்டுப்படுத்துவது தான் திட்டம்.
இந்த புதிய சட்ட விதிக்கு இணங்க முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர் தயாராக உள்ளதா என்பதை சரிபார்க்க ஐரோப்பிய யூனியன் உயர் அதிகாரி ஒருவர் சிலிக்கான் வேலியில் முகாமிட்டுள்ளார். இது தொடர்பாக ட்விட்டர் தளத்தின் சிஇஓ லிண்டா யாக்காரினோ, ட்விட்டர் ஊழியர்களுடன் ஐரோப்பிய யூனியனின் ஆணையர் தியரி பிரெட்டன் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு ட்விட்டர் தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது. இதில் எலான் மஸ்க், காணொளி மூலமாக இணைந்துள்ளார். ஐரோப்பிய யூனியனின் டிஜிட்டல் கொள்கையை தியரி பிரெட்டன் மேற்பார்வை செய்து வருகிறார்.
“பயனர் பாதுகாப்பு சார்ந்த விதிகளுக்கு இணங்க ட்விட்டர் இயங்க வேண்டும். குறிப்பாக தவறான தகவல் பரப்புதல் மற்றும் குழந்தைகள் துஷ்பிரயோகம் (Child Abuse) சார்ந்த கன்டென்ட்கள் கூடாது. அதை தடுப்பதற்கான தொழில்நுட்பம் ட்விட்டரில் இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அதை ஈடு செய்யும் வகையிலான ரிசோர்ஸ் இருக்க வேண்டும். இந்த விதி அமலுக்கு வரும் போது அதற்கு இணங்க ட்விட்டர் தளம் சில மாற்றங்கள் செய்ய வேண்டி உள்ளது. இது குறித்து மஸ்க் மற்றும் குழுவினருடன் தெளிவாக பேசி உள்ளேன்.
நிறுவனங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்ல நான் இங்கு வரவில்லை. ஒழுங்குமுறை சட்டங்கள் என்ன என்பதை அவர்களுக்கு தெளிவுப்படுத்த தான் வந்துள்ளேன்” என தியரி பிரெட்டன் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய டிஜிட்டல் சேவை விதி மெட்டா, டிக்டாக் என முன்னணி சமூக தளங்களில் வரும் ஆகஸ்ட் முதல் அமலுக்கு வருகிறது. அதனால் மெட்டா சிஇஓ மார்க் ஸூகர்பெர்க் உடன் தியரி பிரெட்டன் பேச உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஏனெனில், மிகவும் பிரபலமாக உள்ள தளங்களில் தான் இந்த தகவல்கள் அதிகம் பரவுவதாக சொல்லப்படுகிறது.
குறிப்பாக LGBTQ+ பயனர்கள் பாதுகாப்பில் ட்விட்டர் மிகவும் மோசம் என கிளாட் (GLAAD) எனும் தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மஸ்க், ட்விட்டர் தளத்தை வாங்கியது முதல் அந்த தளத்தில் வெறுப்பு பேச்சு அதிகரிக்குமோ என்ற அச்சம் பயனர்கள் மத்தியில் எழுந்தது. ஏனெனில், மஸ்க் கடந்த ஆண்டு ஏப்ரலில் ஜனநாயகத்துக்கு அடிப்படையே பேச்சு சுதந்திரம் தான் என கருத்து சொல்லி இருந்தார். ஆனாலும் அதை சூசகமாக அப்போது அவர் சொல்லி இருந்தார். குறிப்பாக அது உள்நாட்டு சட்ட திட்டங்களுக்கு பொருந்தும் எனவும் சொல்லி இருந்தார்.
நிச்சயம் டிஜிட்டல் சேவை சட்டம் அமலுக்கு வந்தால் அதற்கு இணங்க ட்விட்டர் செயல்படும் என மஸ்க் தெரிவித்துள்ளார். உள்நாட்டு சட்டங்களுக்கு ஏற்ப சமூக வலைதளங்களின் செயல்பாடு இருப்பது அவசியம் என பிரதமர் மோடியை அண்மையில் சந்தித்த பிறகு மஸ்க் சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது.
சுமார் 450 மில்லியன் பயனர்கள் கொண்டது ஐரோப்பிய யூனியன். அதனால் புதிய சட்ட விதிகளுக்கு ஏற்ப முன்னணி சமூக வலைதளங்கள் இயங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விதிகளை மீறினால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ஓர் ஆண்டுக்கான உலக வருவாயில் 6 சதவீதத்தை அபராதமாக செலுத்த வேண்டும். மேலும், விதிகளை மீறும் நிறுவனங்கள் ஐரோப்பிய யூனியனில் இயங்கவும் தடை விதிக்கப்படும் என தெரிகிறது. இந்த ஆண்டின் இறுதியில் ஏஐ தொழில்நுட்பம் சார்ந்த சட்ட விதிகளை கொண்டு வர உள்ளது ஐரோப்பிய யூனியன்.