
போடி: படகுகள் இயக்க தடை விதிக்கப் பட்டுள்ளதால், ஆனையிரங்கல் அணை களையிழந்து மலைக் கிராமங்களில் சுற்றுலா வர்த்தகம் வெகுவாய் பாதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், போடி மெட்டில் இருந்து 25 கி.மீ. தொலைவில் கொச்சி தேசிய நெடுஞ் சாலையில் ஆனையிரங்கல் அணை அமைந்துள்ளது. கேரள மின்வாரியம் சார்பில் பராமரிக்கப்படும் இந்த அணை யில், 2015-ம் ஆண்டு முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக படகுகள் இயக்கப்படுகின்றன.
இதற்காக, ஸ்பீடு, பெடல், துடுப்பு உள்ளிட்ட படகுகளும் மற்றும் பரிசல்களும் இங்கு உள்ளன. இந்நிலையில், படகு இயக்குவதால் சுற்றுச்சூழலுக்கு மாசு மற்றும் தண்ணீர் குடிக்க வரும் யானைகளுக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறி, கேரள உயர்நீதிமன்றம் படகு சவாரிக்கு தடை விதித்தது. அதன்படி, கடந்த ஒரு மாதமாக இந்த அணையில் படகுகள் இயக்கப்படாமல் உள்ளதால், சுற்றுலா சார்ந்த தொழில்கள் இப்பகுதியில் களையிழந்து காணப்படுகின்றன.
வழக்கமாக இப்பருவத்தில் மழை அதிகம் இருக்கும். ஆனால், தற்போது மழைப் பொழிவு இன்றி குளிர்ந்த சூழ்நிலை நிலவுகிறது. இதனால், இங்கு ஆர்வமுடன் வரும் நூற்றுக்கணக்கான சுற்று லாப் பயணிகள், படகு சவாரி இல்லாததால் ஏமாற்றத்துடனேயே திரும்பிச் செல்கின்றனர்.
இது குறித்து இப்பகுதியைச் சேர்ந்த ஏலத்தோட்ட விவசாயி விஷ்வம் என்பவர் கூறுகையில், ‘இந்த அணைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளால் ஆட்டோ, ஜீப், கைடு, டீ கடை, ஹோட்டல், ரிசார்ட்ஸ் மற்றும் சிறு வர்த்தகங்கள் அதிகம் நடைபெற்று வந்தன. படகு இயக்கப்படாததால் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. தண்ணீர் குடிக்க வரும் யானை களுக்கு இடையூறு ஏற்படுத்தாத சத்தம் எழுப்பாத பெடல் போட், பரிசல் போன்றவற்றையாவது இயக்க நடவடிக்கை எடுக்க வேண் டும்’ என்றார்.
கேரள மின்வாரிய சுற்றுலாத் துறை அலுவலர்கள் கூறுகையில், ‘இடுக்கி மாவட்டத்தைப் பொருத்தளவில், மாட்டுப்பட்டி, குண்ட லணை, தேக்கடி, பொன்முடி உள்ளிட்ட பல அணைகளிலிலும் படகு சவாரி நடைபெறுகிறது. அங்கும் யானை உள் ளிட்ட பல்வேறு விலங்குகள் அணைக்கு அருகிலேயே நடமாடுகின்றன. ஆனால், படகு சவாரிக்கு இங்கு மட்டும்தான் தடை விதிக்கப் பட்டுள்ளது’ என்றனர்.
தற்போது, இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நறுமணப் பொருட்கள் விற்பனை மையத்தை உள்ளடக்கிய பூங்கா, கலைநயமாக மாற்றப்பட்ட மரச்சிற்பங்கள் போன்றவற்றை மட்டும் ரசித்து விட்டுச் செல்கின்றனர்.