National

நிறைவேறியது ‘தேசிய கவுரவ காப்பு மசோதா’ – பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக சிந்தித்து செயல்பட வேண்டும் | Protection of National Honor Bill – Think and act as a responsible opposition

நிறைவேறியது ‘தேசிய கவுரவ காப்பு மசோதா’ – பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக சிந்தித்து செயல்பட வேண்டும் | Protection of National Honor Bill – Think and act as a responsible opposition


(தேசிய கொடி எரிப்பு, காந்தி சித்திரம், படம் எரிப்பு, சிலை உடைப்பு போன்றவற்றை தடுக்கும் நோக்கில் கடந்த 1957-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி மதராஸ் சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டதும், உறுப்பினர்கள் நடத்திய விவாதத்தின் தொடர்ச்சி..)

நிதியமைச்சர், அவை முன்னவர் சி.சுப்பிரமணியம்: “சாதி முறை ஒழிய வேண்டும் என்று விரும்புகிறார் ராமசாமி நாயக்கர். அதை எல்லோருமே ஒப்புக்கொள்கிறோம். அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதில்தான் கருத்து வேறுபாடே ஏற்படுகிறது. பிராமண சமூகமே இல்லாமல் செய்யப்பட வேண்டும் அல்லது அவர்களைக் கொன்றுவிட வேண்டும் அல்லது அனைவரையும் அடித்து நாட்டைவிட்டே துரத்திவிட வேண்டும் என்கிறார். இதுதான் உங்களுடைய கருத்துமா என்று திமுக தலைவரைக் கேட்க விரும்புகிறேன். பிராமணர்களைப் படுகொலை செய்தால்தான் சாதிமுறை ஒழியும் என்ற கருத்துக்கு திமுக தலைவரும் உடன்படுகிறாரா? இந்தக் கேள்விக்கு வெளிப்படையான பதிலைப் பெற விரும்புகிறேன், இந்தக் கேள்வி தொடர்பாக அவருடைய மனதில் என்ன மாதிரியான எண்ணங்கள் நிலவுகின்றன என்பதை அறிந்துவிடத் துடிக்கிறேன்.

ஈ.வெ.ராமசாமி நாயக்கருக்கும் தங்களுக்கும் வெவ்வேறு விதமான கருத்துகள் இருப்பதாக திமுக கூறுகிறது. அடிப்படையான விஷயங்களில் வேறுபாடா அல்லது சின்னச் சின்ன விஷயங்களில் மட்டும்தான் வேறுபாடா? ஈ.வெ.ராவிடமிருந்து விலகிய பிறகு திமுக தனது கொள்கைகளை மாற்றிக் கொண்டுவிட்டதா? அண்ணாதுரை இங்கு பேசியதிலிருந்து அவர்களிடையே அடிப்படையான கொள்கைகளில் மாற்றமில்லை, நாயக்கருடன் மீண்டும் சேர்ந்து கொள்ளும் நாளையே அவர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற முடிவுக்கே வருகிறேன்.

மசோதா ஏன் அவசியம்?: “ஒருவருடைய எண்ண ஓட்டங்களைக் கட்டுப்படுத்த சட்டமியற்றுவது என்பது கடினமான செயல், அப்படி முயல்வதிலும் அர்த்தம் இல்லை. ஆனால் அவரே தான் என்ன நினைக்கிறார் என்பதைத் தெரிவிக்கத் தொடங்கியவுடன் நிலைமையே மாறிவிடுகிறது. இந்த மசோதா கொண்டுவரப்பட காரணமாக அமைந்தவை எவை என்பதிலோ மசோதாவின் நியாயத்தன்மை குறித்தோ இந்த அவையில் எவரிடமும் கருத்து மாறுபாடு இல்லை, அண்ணாதுரையைத் தவிர. இந்த மசோதா கட்டுப்படுத்த நினைப்பவற்றை மக்களே பார்த்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிடலாம் என்று பிரஜா சோஷலிஸ்ட் கட்சி உறுப்பினர் கூறினார்; பொது ஒழுங்குடன் ஒரு சமூகம் இயங்க இப்படியெல்லாம் ‘மக்களே முடிவு செய்து கொள்ளட்டும்’ என்று விட்டுவிடக்கூடாது.

மிகவும் முக்கியமான ஒரு தருணத்தில், முக்கியமான விஷயத்தில் திட்டவட்டமான முடிவைத் திமுக எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த சட்டமன்றம் மக்கள் அனைவருடைய பிரதிநிதியாகும், சமூகத்துக்கு ஒரு ஆபத்து என்றால் உடனே செயல்பட வேண்டியது இதன் கடமை. இந்த விஷயத்தில் உறுதியான நிலையைஎடுத்துவிட்டால் தன்னுடைய கட்சியின் எதிர்காலம் என்னாகும் என்று அதன் தலைவர் கவலைப்படுவதைப் போலத் தெரிகிறது. எதிர்காலத்தில் இந்த மாநிலத்தை ஆளும் பொறுப்பு தங்களுக்கும் வரக்கூடும் என்பதை நினைத்து இதில் நல்ல முடிவை திமுக எடுக்க வேண்டும்.

எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் போது, பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக சிந்தித்துச் செயல்பட வேண்டும். இந்த அரசின் மீது திமுகவுக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் அவையில் தொடர்ந்து இருந்து இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களிக்கலாம், வெளிநடப்பு செய்துவிடக் கூடாது. மிகவும் நெருக்கடியான தருணங்களை அவர்கள் சந்தித்தேயாக வேண்டும், அதைத் தவிர்ப்பதற்கு வெளிநடப்பு உத்தியைக் கடைபிடிக்கக் கூடாது”.

சுவாமி சகஜானந்தர்: ஹரிஜனங்களின் வாழ்க்கையை முன்னேற்ற திமுக எதையும் செய்துவிடவில்லை, இப்போது சாதியமைப்பு முறையை நீக்க வேண்டும் என்கின்றனர்.

இந்த விவாதத்தின் போது திமுக உறுப்பினர்கள் அடிக்கடி குறுக்கிட்டனர். “எந்தவித குறுக்கீடும் இல்லாமல் பேச அனுமதிக்க வேண்டும் என்று திமுக தலைவர் விடுத்த வேண்டுகோளை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஏற்றனர், அவை முன்னவரின் பேச்சின் போது (சி. சுப்பிரமணியம்) திமுகவினர் அடிக்கடி குறுக்கிடுகின்றனர்” என்று சுட்டிக்காட்டினார் சட்டப் பேரவைத் தலைவர்.

தனிப்பட்ட அணுகுமுறை யோசனை: நிதியமைச்சர் சுப்பிரமணியம் அதற்குப் பிறகு தொடர்ந்து பேசினார். “சேரிகளே இருக்கக் கூடாது என்றால் சேரிகளை அழிப்பதோ எரிப்பதோ வழிமுறையல்ல; லட்சியம் மட்டும் முக்கியமல்ல, லட்சியத்தை எட்டுவதற்கான வழிமுறை அதைவிட முக்கியம் என்றார் காந்தி. சமூகத்தில் குழப்பத்தையும் கலகத்தையும் ஏற்படுத்தும் செயலைச் செய்வதற்கு எவரையும் அனுமதிக்க முடியாது. ஈ.வெ.ராவின் முடிவை மாற்ற அவரைத் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேச வேண்டும் என்கிறார் அண்ணாதுரை, அது அவருடைய தனிப்பட்ட கருத்து, அப்படியொரு கருத்தொற்றுமை மக்களிடையே இல்லை. தேசியக் கொடி அவமதிக்கப்படாமல் காக்கப்பட வேண்டுமா இல்லையா என்பதற்குத் திட்டவட்டமான பதிலை திமுக தெரிவிக்க வேண்டும், வெளிநடப்பு செய்துவிடக் கூடாது”.

அப்போது கோவிந்தசாமி, பி.சுப்பிரமணியம், அன்பழகன் குறுக்கிட்டனர். “எதிர்ப்பைத் தெரிவிக்க அவையிலிருந்து வெளிநடப்பு செய்வது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நடைமுறையா இல்லையா?’ என்று கேட்டார் அன்பழகன்.

தேர்தலின் போது அரசின் கொள்கை:

வி.கே.ராமசுவாமி முதலியார்: இந்துக்களின் மன உணர்வைப் புண்படுத்தும் வகையில் சில நாட்களுக்கு முன்னர் சிலர் நடந்து கொண்டனர். இந்துக் கடவுள் சிலைகளை உடைத்தனர், இந்துக்கள் புனிதமாக வணங்கும் தெய்வங்களின் படங்களை அவமதித்தனர். அப்போதெல்லாம் அரசு அவர்கள் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் விட்டது வியப்பாக இருந்தது.

தேர்தல் சமயத்தில் தங்களுக்கு அவர்களுடைய ஆதரவு தேவை என்பதால், அரசுஅமைதி காத்தது என்று நம்புகிறேன். சமீபத்தில் நடந்த தேர்தலின் போது கூட அந்தக் கட்சியினர் தங்களுடைய கொடியையும் காங்கிரஸ் கொடியையும் கைகளில் ஏந்திச் சென்றுகாங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வீடு வீடாக வாக்கு சேகரித்தனர். காரணம் எதுவாக இருந்தாலும், ஒரு மதத்தாரின் உணர்வுகளைப் புண்படுத்தும் எந்தச் செயலும் கண்டிக்கப்பட வேண்டியதே. தேர்தலில் அந்த இயக்கத்தவரின் ஆதரவு தேவை என்பதால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்தது என்பதே என்னுடைய குற்றச்சாட்டு.

மத்திய அரசிடமிருந்து ரகசிய கட்டளை வந்த பிறகுதான் இந்த மசோதாவைக் கூட அவசர அவசரமாக கொண்டு வந்தனர் என்று வெளியில் உள்ள மக்கள் நினைக்கிறார்கள். தேசியக் கொடியை எரிப்பதாக இருக்கட்டும், காந்தியின் உருவப்படங்களை உடைப்பதாக இருக்கட்டும் குறிப்பிட்ட மதத்தாரின் உணர்வுகளைப் புண்படுத்தும் செயல்களாக இருக்கட்டும் – இவையெல்லாம் ஆபத்தான எதிர் விளைவுகளை ஏற்படுத்திவிடும், எனவே இவற்றை எல்லாம் நீண்ட நாட்களுக்கு சகித்துக் கொண்டிருக்கக் கூடாது. இப்போதாவது அரசு நடவடிக்கை எடுக்கிறதே என்று எனக்கு மகிழ்ச்சிதான். எங்களுடைய கட்சியைப் பொறுத்த வரை இதை ஆதரிக்கிறது.

உள்துறை அமைச்சரின் பதில்: விவாதங்களுக்கு உள்துறை அமைச்சர் பக்தவத்சலம் பதில் அளித்தார். “இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சித் தலைவரும் பிற எதிர்க்கட்சியினரும் ஆதரவு அளித்திருப்பதை வரவேற்கிறேன். இந்த மசோதாவை எப்போதோ கொண்டு வந்திருக்க வேண்டும் என்பதுதான் முக்கியமான குற்றச்சாட்டாக இருந்தது, ஏன்தாமதம் என்பதை அரசுத் தரப்பில் விளக்கியிருக்கிறோம். தேச கவுரவத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் மசோதாவின் நோக்கம் என்பதால் கட்சி வேறுபாடுகளை விட்டுவிட்டு அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இது சாதாரணமான, எளிய மசோதா என்பதால் தெரிவுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டியத் தேவை இல்லை. இந்த அவையே இப்போது மசோதாவின் அனைத்து அம்சங்கள் குறித்தும் விவாதித்து விட்டதால் இதை நிறைவேற்றிவிடலாம்.

(தொடரும்..)





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *