(தேசிய கொடி எரிப்பு, காந்தி சித்திரம், படம் எரிப்பு, சிலை உடைப்பு போன்றவற்றை தடுக்கும் நோக்கில் கடந்த 1957-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி மதராஸ் சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டதும், உறுப்பினர்கள் நடத்திய விவாதத்தின் தொடர்ச்சி..)
சி.என்.அண்ணாதுரை (திமுக தலைவர்): இந்த மசோதாவை எதிர்ப்பது மட்டுமல்ல, இது சர்வாதிகார ஆட்சி முறைக்கே இட்டுச் செல்லும் என்பதற்காக இதைக் கண்டிக்கிறேன். தேசியக் கொடியையோ அரசமைப்புச் சட்டத்தையோ எரிப்பதை நான் ஆதரிக்கிறேன் என்று இதைக் கொண்டு தவறான முடிவுக்கு யாரும் வந்துவிடக் கூடாது. சொல்லப் போனால் இத்தகைய பிரச்சாரங்களில் இருந்து விலகி நிற்பதுடன், வன்மையாகக் கண்டித்தும் இருக்கிறேன். அப்படியொரு சம்பவம் நடைபெறாமலிருக்கும் நோக்கத்துடன் இப்படியொரு மசோதாவைக் கொண்டு வருவது தேவையில்லை என்று கருதுகிறேன், அப்படியும் இது நிறைவேற்றப்பட்டால் இந்த அரசு மிகவும் கொடூரமானது என்ற எண்ணத்தையே ஏற்படுத்தும். தேசத்தின் மீதும் தேசியக் கொடியின் மீதும் மக்களுக்கு மரியாதையை ஊட்டுவதற்கும் அதைத் தக்க வைப்பதற்கும் சட்டம் இயற்றுவது கூடாது; மக்களுடைய விருப்பங்களை நிறைவேற்றி நாட்டின் மீதும் நாட்டின் கவுரவச் சின்னங்கள் மீதும் அவர்களுக்கு பிடிப்பு ஏற்படுமாறு நடந்து கொள்ள வேண்டும்.
உருவப்படங்களுக்கு பாதுகாப்பு: “நீங்கள் காந்தியாரின் உயிரைக் காப்பாற்றத் தயாராக இல்லாவிட்டாலும் காந்தியாரின் படத்தைக் காப்பாற்றவாவது முயற்சி எடுத்துக் கொண்டீர்களே பெருமைதான் என்று கூற விரும்புகிறேன். காந்தியார் கோட்ஸேவினால் கொல்லப்பட்டார் என்பதும் சாதி வெறியை அடக்க காந்தியார் முயற்சி எடுத்ததுதான் அவருடைய உயிருக்கே ஆபத்தாய் முடிந்தது என்பதும் உலகம் அறிந்த உண்மை.
“காந்தி மீது மிகுந்த அன்பு கொண்டவர்தான் ஈ.வெ.ராமசாமி நாயக்கர்; அது மட்டுமல்ல தென்னாட்டுக்கு வந்த காந்தி, அவருடைய மாளிகையில் ஒரு நாள் தங்கியிருக்கிறார். அப்படிப்பட்டவர் காந்தியின் உருவப் படங்களை உடைத்து நொறுக்க வேண்டும் என்கிறார் என்றால் அதற்கான காரணம் என்ன என்று அரசு ஆராய வேண்டும். எட்டு ஆண்டுகள் நாட்டை ஆண்ட பிறகு, தேச பக்தியையும் தேசியச் சின்னங்களுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தையும் மக்களிடம் ஏற்படுத்த சட்டம் இயற்றுவதுதான் அவசியம் என்று காங்கிரஸ் அரசு கருதுகிறதா?
“தமிழர்களிடையே ஈ.வெ.ராவுக்கு செல்வாக்கு இருக்கிறது. அந்த செல்வாக்கை தேர்தல் சமயத்தில் தங்களுக்கு ஆதரவாக அவர் திரட்டவில்லை என்றால் வெவ்வேறு கட்சிகளும் அவரைக் குறை கூறுகின்றன. அவரிடமிருந்து ஆதரவைப் பெறாத அரசியல் தலைவர் யாராவது உண்டு என்றால் அது நான்தான். ஒரு செயல் குற்றமா இல்லையா என்பது நாம் பார்க்கும் கோணத்தைப் பொறுத்தது. பிள்ளையார் சிலைகளை உடைத்த போதும் ராமர் படங்களை எரித்த போதும், ‘அவருடைய செயல்கள், ஆன்மிகர்களுக்கு அந்த தெய்வங்கள் மீது பக்தியை அதிகரிக்கச் செய்தது’என்று இதே அரசு கருதியது. அதே போன்றதொரு வேலையை அவர் மீண்டும் அறிவித்தவுடன், அரசு அதை வேறு கண்ணோட்டத்தில் பார்த்து இந்த மசோதாவைக் கொண்டு வந்திருக்கிறது.
“இந்த சட்டமே கூட நாட்டு மக்களிடத்தில் தேசிய உணர்வை ஊட்டவோ, காக்கவோ உதவாது. தேசிய சின்னங்களுக்கு அவமரியாதை செய்தால் மூன்றாண்டுகள் வரையில் சிறைத் தண்டனை என்று சட்டமியற்றினாலும் மக்கள் தங்களுடைய கோரிக்கைகளுக்காக இப்படியொரு செயலில் எதிர்காலத்தில் நிச்சயம் ஈடுபடக் கூடும். அவருடைய வழக்கத்துக்கு மாறான பேச்சுகளுக்காக மனநோயாளி என்றெல்லாம் அவரைப் பழிப்பது முறையல்ல. அவர் அப்படி எச்சரித்ததற்கு உண்மையான காரணம் என்ன என்று அரசு ஆராய வேண்டும், மேலோட்டமாக, அவர் பேசிய வார்த்தைகளுக்குப் பொருள் கொண்டு இப்படியெல்லாம் சட்டமியற்றக் கூடாது. சாதியமைப்பு முறையே கூடாது, அதை ஒழிக்க திட்டவட்டமான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்கிறார் அவர். அவருடைய கருத்துக்கு மாற்றான கருத்துள்ளவர்கள் எவருமே இல்லை.
அரசமைப்புச் சட்ட திருத்தங்கள்: “இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு அவ்வப்போது திருத்தங்கள் செய்யப்படுகின்றன; இவையெல்லாம் சட்டம் சரியில்லை அல்லது செயல்படவில்லை என்பதற்காக ‘நாகரிகமாக அதை எரிக்கும் முறை’ என்றே நான் கருதுகிறேன். அரசமைப்புச் சட்டத்தை எரிக்க வேண்டும் என்று அவர் கூறுவது, அவற்றில் உள்ள கடுமையான போதாமைகளை சுட்டிக்காட்டத்தான். சாதி அமைப்பு முறையை நீக்குவதை காங்கிரஸ் அரசு விரைவுபடுத்தும் என்ற நம்பிக்கையில், மதறாஸில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வெற்றிக்கு ஈ.வெ.ரா. நிறைய உதவிகளைச் செய்தார். உதவிகளைப் பெற்ற காங்கிரஸ் அவரைக் கைவிட்டுவிட்டது. அவர் சட்டங்களை மதிப்பவர், தேவையில்லாமல் அவர் சட்டங்களை மீற மாட்டார் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன். சாதி முறை என்ற தீமையை விரைந்து முடிவுக்குக் கொண்டுவர அரசு உடனடியாகச் செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான் சற்று வேகமாகப் பேசியிருக்கிறார். அப்படிப் பேசுவதையெல்லாம் செயல்படுத்திவிட வேண்டும் என்ற எண்ணமுள்ளவர் அல்ல அவர்.
சமூக நலனுக்கு எதிரான செயல்களைத்தான் தீங்கானவையாகப் பார்க்கிறேன், சமூக நலனுக்காக விடப்படும் எச்சரிக்கைகளை அப்படிப் பார்க்க வேண்டியதில்லை என்றே கருதுகிறேன். நாயக்கருக்கு மிகவும் பிடித்தகாங்கிரஸ் தலைவர் காமராஜர்; இப்படியொரு சட்டம் இயற்றுவதற்குப் பதிலாக (முதலமைச்சர்) காமராஜர் ஏன் அவரைச் சந்தித்து இது தொடர்பாகப் பேசி அவருடைய வழியை மாற்றக் கூடாது? அவையில் பெரும்பான்மை வலுவைக் கொண்டிருக்கும் அரசு இப்படியொரு மசோதாவை நிறைவேற்றியது என்பதில் பெருமை ஏதுமில்லை, மாறாக உரியவரிடம் பேசி சுமுகமான முடிவை ஏற்படுத்துவதில்தான் ராஜதந்திரமே இருக்கிறது.
அவருடைய வழிமுறைகள் சரியில்லை என்பதால்தான் நான் அவரிடமிருந்து விலகி நிற்கிறேன். ஈ.வெ.ராவை முதலமைச்சர் காமராஜர் சந்தித்துப் பேச வேண்டும் என்பதைமீண்டும் வலியுறுத்துகிறேன், ஆயிரக்கணக்கானவர்கள் சட்டத்தை மீறும் செயலில் ஈடுபட்டு சிறையில் அடைபடும் சூழலை ஏற்படுத்துவதால் யாருக்கும் பயன் இல்லை.
இந்த அரசு ஏற்கெனவே முத்துராமலிங்கத் தேவரைக் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டது, அடுத்து நாயக்கரைக் கைது செய்வது அரசின் நோக்கமாகத் தெரிகிறது. அப்படியொரு சூழல் ஏற்படுவது விரும்பத்தக்கதும் அல்ல. தென்னிந்திய சுற்றுப் பயணத்தின் போது பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு கறுப்புக் கொடி காட்டப்படுவது, அவரைஅவமதிக்கும் செயல் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை. அதை சட்டமியற்றினால் தடுத்துவிட முடியுமா, அப்படி சட்டமியற்றுவதும் அவசியமா? இப்படி எடுத்ததெற்கெல்லாம் சட்டம் இயற்றிக் கொண்டிருந்தால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் அழிந்து, சர்வாதிகாரம் மட்டுமே நிலைகொண்டுவிடும்.
சி.சுப்பிரமணியம் குறுக்கீடு
நிதியமைச்சர், அவை முன்னவர் சி.சுப்பிரமணியம்: இந்த விவாதத்துக்கு உள்துறை அமைச்சர் பக்தவத்சலம் விரிவாக பதில் அளிப்பார், ஆனால் இதுவரை நடந்த விவாதங்களின் போது தெரிவிக்கப்பட்டவை தொடர்பாக சில கருத்துகளை மட்டும் கூறுவது அவசியம் என்று கருதுகிறேன். அதுவும் திமுக தலைவரின் பேச்சைக் கேட்டதும் அப்படி தெரிவிப்பதுமிக மிக அவசியம் என்று தீர்மானித்தேன்.
அண்ணாதுரை பேசிய போது ஈ.வெ.ராவைத் தந்தை என்றும் தன்னை சகோதரன் (அண்ணா) என்றும் கூறிக் கொண்டார். ஈ.வெ.ராவும் அண்ணாவும் இப்போதைக்கு ஒருவரையொருவர் தாக்கிப் பேசுகிறவர்களாக இருக்கலாம், இருவருமே ஒரேமாதிரியான தத்துவங்களில் நம்பிக்கைக் கொண்டவர்கள் என்பதை மறுக்க முடியாது. நாயக்கருடைய அன்பு தனக்குக் கிடைக்கவில்லை மற்றவர்களுக்குக் கிடைக்கிறது என்ற ஆதங்கத்தை அண்ணாதுரை வெளிப்படுத்தினார். அதே சமயம் இயல்பான பாசத்தோடு அவரைப் பற்றிய கருத்துகளைத் தெரிவித்தார். அடிப்படையான கொள்கைகளில் இருவருக்கும் வேறுபாடு இல்லை, வழிமுறைகளில்தான் வித்தியாசம் என்பது அவருடைய பேச்சிலிருந்து உறுதியாகிறது. இலக்கை அடைவதற்காக இதைவிட நாகரிகமான வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்று விரும்புகிறார் அண்ணாதுரை.
(தொடரும்..)