
லார்ட்ஸ்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 9விக்கெட்கள் இழப்புக்கு 311 ரன்கள் குவித்தது. டேவிட் மலான் 127 ரன்கள் விளாசினார்.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரரான ஜானி பேர்ஸ்டோ 13 ரன்னில் மேட் ஹென்றி பந்தில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஜோ ரூட் 29, ஹாரி புரூக் 10, கேப்டன் ஜாஸ் பட்லர் 36 ரன்களில் வெளியேறினர். அதிரடியாக விளையாடி தனது 5-வது சதத்தை விளாசிய டேவிட் மலான் 114 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் 127 ரன்கள் விளாசிய நிலையில் ரச்சின் ரவீந்திரா பந்தில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து லியாம் லிவிங்ஸ்டன் 28, மொயின் அலி 3, சேம் கரண் 20, டேவிட் வில்லி 19 ரன்களில் நடையை கட்ட இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்தது. பிரைடன் கார்ஸ் 15, ரீஸ் டாப்லே 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூஸிலாந்து அணி சார்பில் ரச்சின் ரவீந்திரா 4 விக்கெட்களையும் டேரில் மிட்செல், மேட் ஹென்றிஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 312 ரன்கள் இலக்குடன் நியூஸிலாந்து பேட்டிங் செய்யத் தொடங்கியது.