புதுடெல்லி: நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் இன்று தொடங்கி 22-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலக கட்டிடத்தில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்துக்குப்பின் பேட்டியளித்த காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும் என எதிர்க்கட்சிகள் சார்பில் கோரிக்கை விடப்பட்டது என்றார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பிரபுல் படேல் கூறுகையில், ‘‘விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நாடாளுமன்றம் நாளை புதிய கட்டிடத்துக்கு மாறுகிறது’’ என்றார்.
பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்று தொடங்கும் சிறப்புக் கூட்டத்தில், நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு கால பயணம் குறித்து விவாதிக்கப்படுகிறது. நாளை முதல் புதிய கட்டிடத்தில் நடைபெறும் நாடாளுமன்ற கூட்டங்களில் பல மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதாவை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர வழக்கறிஞர்கள் திருத்த மசோதா, அஞ்சல் அலுவல் மசோதா போன்றவை மக்களவை நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றுள்ளன. எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளதால், மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவும் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்துக் கட்சிக் கூட்டம்: இந்நிலையில், நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. நாடு முழுவதும் இருந்து பிராந்தியக் கட்சிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டன. ஒடிசாவின் பிஜு ஜனதா தளம் மற்றும் தெலங்கானாவின் பாரத ராஷ்டிர சமிதி உள்ளிட்ட கட்சிகள் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவை தாக்கல் செய்ய கோரிக்கை வைக்க இருப்பதாக தெரிவித்துள்ளன.
விலை உயர்வு, வேலையின்மை, மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பேச இருப்பதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.