மதுரை: “நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் கூட்டுவதன் நோக்கத்தை மக்களிடம் சொல்ல பாஜக அரசு பயப்படுகிறது” என எம்.பி., சு.வெங்கடேசன் தெரிவித்தார்.
மதுரையில் அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கான படிப்பக வளாகம் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.30 லட்சம், நமக்கு நாமே திட்டத்தில் 50 லட்சம் என மொத்தம் ரூ.80 லட்சத்தில் படிப்பக வளாகம் திறக்கப்பட்டது. தற்போது அங்கு ரூ.22 லட்சத்தில் மாணவர்கள் படிப்பகக்கூடத்துக்கான பணிகளை எம்பி சு.வெங்கடேசன், எம்எல்ஏ கோ.தளபதி ஆகியோர் அடிக்கல் நாட்டினர். இதில், துணை மேயர் தி.நாகராஜன், வடக்கு மண்டல தலைவர் சரவண புவனேஸ்வரி, மார்க்சிஸ்ட் கட்சி மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி. சு.வெங்கடேசன், “மத்திய பாஜக அரசு நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரை எதற்காக கூட்டுகிறார்கள் என மக்களுக்கு தெரியவில்லை. கூட்டத் தொடரின் நோக்கத்தை மக்களிடம் சொல்ல பாஜக அரசு பயப்படுகிறது. கூட்டத் தொடர் அழைப்பாணையில் ‘கவர்மென்ட் பிசினஸ்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. எனக்குத் தெரிந்து பொதுத்துறையை தனியாருக்கு விற்பதும், அதானியை பலப்படுத்துவதுமே பிரதமர் மோடி அரசின் பிரதான ‘கவர்மென்ட் பிசினஸாக’ உள்ளது.
ஏதோவொரு பெரிய நோக்கத்திற்காக நாடாளுமன்ற சட்ட விதிகளை மதிக்காமலும், கேள்வி நேரம் அல்லாத கூட்டத்தொடரில் அமைச்சர்கள் ஏதோ அறிவிக்கவுள்ளனர். நாடாளுமன்ற கூட்டத் தொடர் எதற்கு என தெரியாமலேயே எம்.பி.க்கள் செல்லவுள்ளனர்” என்றார்.
பின்னர், அருப்புக்கோட்டை நாடார் பள்ளியில் சத்துணவு சமையல் கூடம், பழங்காநத்தம் சோமசுந்தரம் பாரதி நடுநிலைப் பள்ளியில் புதிய கழிப்பறை, முத்துராமலிங்கபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி வளாக சுற்றுச்சுவர் உள்பட ரூ.19 லட்சத்தில் கட்டிமுடித்த பணிகளை சு.வெங்கடேசடன் திறந்து வைத்தார். இவ்விழாவில் மாநகராட்சி மேயர் இந்திராணி, ஆணையாளர் கே.ஜே.பிரவீன் குமார், மண்டல தலைவர்கள் மா.முகேஷ் சர்மா, சுவிதா விமல், மாநகராட்சி உறுப்பினர்கள் வே.சுதன், பெ. கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.