தேனி: இயக்குநரும், நடிகருமான மாரிமுத்துவின் உடல் அவரது சொந்த ஊரான தேனியில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக, அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
தேனி மாவட்டம் பசுமலைத்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. ஆரம்ப காலக்கட்டத்தில் சினிமாவில் உதவி இயக்குநராக பணியாற்றியவர், பின்னர், ‘கண்ணும் கண்ணும்’, ‘புலிவால்’ படங்களை இயக்கினார். ‘யுத்தம் செய்’ படத்தில் இயக்குநர் மிஷ்கின் அவரை குணசித்திர நடிகராக அறிமுகப்படுத்தினார். இதையடுத்து ‘ஜீவா’, ‘கொம்பன்’, ‘உப்புக்கருவாடு’, ‘மருது’, ‘சண்டக்கோழி 2’ உட்பட பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் வில்லன் விநாயகனுடன் இணைந்து நடித்திருந்தார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘எதிர்நீச்சல்’ தொடரில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து பெரிய அளவில் ரசிகர்களிடையே கவனம் பெற்ற மாரிமுத்து வெள்ளிக்கிழமை காலை டப்பிங் பணிகளுக்காக ஸ்டுடியோவுக்குச் சென்றுள்ளார். மூச்சுவிடுவதற்கு சிரமமாக இருப்பதாக கூறி வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு காரை ஓட்டிச் சென்றவர் திடீரென உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக உயிர் இழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, மாரிமுத்துவின் உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திரையுலகத்தைச் சேர்ந்த பலரும், பொதுமக்களும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து நேற்று மாலை அவரின் உடல், அவரது சொந்த ஊரான பசுமலைத்தேரிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட மாரிமுத்துவின் உடல் இறுதி சடங்குகளுக்குப் பின் தகனம் செய்யப்பட்டது.