World

தென்னாப்பிரிக்காவில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இறுதி நாளில் சீன அதிபர் ஜி ஜின்பிங் – பிரதமர் மோடி சந்திப்பு | Chinese President Xi Jinping – Prime Minister Modi met on the final day of the BRICS Summit in South Africa

தென்னாப்பிரிக்காவில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இறுதி நாளில் சீன அதிபர் ஜி ஜின்பிங் – பிரதமர் மோடி சந்திப்பு | Chinese President Xi Jinping – Prime Minister Modi met on the final day of the BRICS Summit in South Africa
தென்னாப்பிரிக்காவில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இறுதி நாளில் சீன அதிபர் ஜி ஜின்பிங் – பிரதமர் மோடி சந்திப்பு | Chinese President Xi Jinping – Prime Minister Modi met on the final day of the BRICS Summit in South Africa


ஜோகன்னஸ்பர்க்: பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இறுதி நாளான நேற்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.

கடந்த 2020-ம் ஆண்டில் இந்தியாவின் லடாக் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன வீரர்களிடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக இரு நாடுகள் இடையே போர் பதற்றம் எழுந்தது. ராணுவ, ராஜ்ஜிய ரீதியில் நடைபெற்ற பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் தற்போது பதற்றம் தணிந்திருக்கிறது. எனினும் இரு நாடுகள் இடையிலான எல்லைப் பிரச்சினை இப்போதும் நீறு பூத்த நெருப்பாகவே இருந்து வருகிறது.

இந்த சூழலில் கடந்த ஆண்டு இந்தோனேசியாவின் பாலி தீவில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசினர். பாலியில் இரு தலைவர்களும் அதிகாரபூர்வமாக சந்தித்துப் பேசியதை கடந்த ஜூலையில் மத்திய வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்தது.

இந்த சூழலில் தென்னாப் பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் பிரிக்ஸ் உச்சி மாநாடு கடந்த 22-ம் தேதி தொடங்கியது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பங்கேற்றனர். மாநாட்டின் இறுதி நாளான நேற்று இரு தலைவர்களும் தனியாக சந்தித்து பேசினர்.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை செயலர் வினய் குவாத்ரா கூறும்போது, “இந்திய, சீன எல்லையில் அமைதியை நிலைநாட்ட வேண்டும். அப்போதுதான் இருநாட்டு உறவு சீரடையும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்” என்று தெரிவித்தார். மாநாட்டின் இறுதியில் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் கைகுலுக்கி பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இருவரும் அதிகாரப்பூர்வமாக சந்தித்துப் பேசினார்களா என்பதை இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சகங்களும் உறுதி செய்யவில்லை. எனினும் மோடியும் ஜி ஜின்பிங்கும் எல்லைப் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

6 புதிய நாடுகள்: பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பில் இணைய சுமார் 60-க்கும் மேற்பட்ட நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. சுமார் 30-க்கும் மேற்பட்ட நாடுகள் நேரடியாக விண்ணப்பம் செய்துள்ளன.

இதுதொடர்பாக பிரிக்ஸ் மாநாட்டில் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. இதன்படி அர்ஜென்டினா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 6 நாடுகளை பிரிக்ஸ் அமைப்பில் இணைக்க முடிவு எடுக்கப்பட்டது. இந்த 6 நாடுகள் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளாக அங்கீகரிக்கப்பட உள்ளன.

இதுதொடர்பாக பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: பிரிக்ஸ் அமைப்பை விரிவாக்கம் செய்ய இந்தியா முழு ஆதரவு அளிக்கும். இதன்மூலம் உலகளாவிய அளவில் புதிய ஒழுங்கை ஏற்படுத்த முடியும். கடந்த 20-ம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்ட சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தங்களை செய்ய முடியும்.

பிரிக்ஸ் அமைப்பில் இணைய உள்ள 6 புதிய நாடுகளையும் வரவேற்கிறேன். இந்த நாடுகளின் தலைவர்கள், மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். பிரிக்ஸ் அமைப்பில் இணைய மேலும் பல்வேறு நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. இந்த விவகாரத்தில் உறுப்பு நாடுகளிடையே கருத்தொற்றுமையை ஏற்படுத்த இந்தியா தொடர்ந்து முயற்சி செய்யும்.

சந்திரயான் -3 திட்டம் வெற்றி அடைந்ததற்கு உலக நாடுகள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றன. இது இந்தியாவுக்கான வெற்றி மட்டுமல்ல. ஒட்டுமொத்த மனித குலத்தின் வெற்றி. அறிவியல் வளர்ச்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும். சந்திரயான் -3 வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த உலக நாடுகளின் தலைவர்கள் உட்பட அனைவருக்கும் இந்தியாவின் சார்பில்நன்றியை உரித்தாக்குகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக ‘பிரிக்ஸ்- ஆப்பிரிக்கா’ கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: இந்த மாநாட்டின் மூலம் ஆப்பிரிக்கா, ஆசியா, லத்தீன் அமெரிக்க நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். சர்வதேச அரங்கில் தெற்கு நாடுகளுக்கு ஆதரவாக இந்தியா குரல் கொடுத்து வருகிறது. ஒரு காலத்தில் தெற்கு நாடுகள் காலனி ஆதிக்கத்தின் பிடியில் இருந்தன.

இந்திய தேசத் தந்தை மகாத்மா காந்தி, ஆப்பிரிக்க மண்ணில் அகிம்சை வழி போராட்டத்தை முன்னெடுத்து சென்றார். காந்தியின் கொள்கை, போதனைகளால் நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்கள் அவரவர் நாடுகளில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினர். ஆப்பிரிக்க நாடுகளுடனான நல்லுறவுக்கு இந்தியா எப்போதும் முன்னுரிமை அளிக்கிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *