
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சுற்றி வரும் புள்ளிமான்களுக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தின்பண்டங்களை வழங்குவதை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படும் “அண்ணாமலை”யில் புள்ளி மான்கள், மயில்கள் மற்றும் குரங்குகள் உட்பட வனவிலங்குகள் உள்ளன. கோடை காலத்தில் தாகத்தை தணித்துக்கொள்ள வனவிலங்குகள் மலையடிவாரம் மற்றும் சமதள பகுதிக்கு தண்ணீர் தேடி படையெடுப்பது வாடிக்கை. இதில், புள்ளிமான்களின் வருகை அதிகம்.
தண்ணீரை தேடி வரும் புள்ளிமான்கள், வன விலங்கு வேட்டை கும்பலிடம் இருந்து தப்பித்து உயிர் பிழைத்தாலும், நாய்களின் பிடியில் சிக்கி உயிரிழக்கின்றன.
அண்ணாமலையில் இருந்து மலையடிவாரத்துக்கு வரும் புள்ளிமான்கள் கிரிவலப் பாதைக்கு வருவதை தடுக்க, இரும்பு தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாக்கப்படுகிறது. தடுப்பு வேலியின் உள் பகுதியில் புள்ளி மான்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி வருகின்றன. புள்ளிமான்களின் அழகிய நடை அசைவு மற்றும் ஓட்டத்தை பார்த்து கிரிவல பக்தர்கள் மகிழ்கின்றனர். மான்களை புகைப்படம் எடுத்தும் ரசிக்கின்றனர். மகிழ்ச்சி மற்றும் ரசனையை கடந்து இரக்க குணமும் உள்ளதால், புள்ளிமான்களுக்கு தின்பண்டங்களை வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இதுகுறித்து வன ஆர்வலர்கள் கூறும் போது, “இயற்கையான உணவு வகைகளான காய், கனிகள், தழைகள் போன்றவற்றை வன விலங்குகள் உண்டு வாழ்கின்றன. கோடையில் வறட்சி ஏற்படுவதால், தங்களது வாழ்விடத்தில் இருந்து சம தளத்துக்கு வரும் விலங்குகளுக்கு பிஸ்கெட், முறுக்கு உள்ளிட்ட தின்பண்டங்களை கிரிவல பக்தர்கள் வழங்குகின்றனர்.

இதனால், புள்ளி மான்களின் உணவு சங்கிலி அறுந்துபோகிறது. ஏற்கெனவே, குரங்குகளுக்கு தின்பண்டங்களை வழங்கி, உணவு பழக்கத்தை மாற்றிவிட்டனர். துரித உணவுகள், குளிர் பானங்களை சாப்பிடும் பழக்கத்துக்கு குரங்குகளை மனிதர்கள் மாற்றிவிட்டனர்.
குரங்குகளை போன்று புள்ளி மான்களையும் மாற்ற வேண்டாம். இதற்கு தேவையான உணவுகளை, வனப்பகுதியில் தேடிச் சென்று புள்ளிமான்கள் உட்கொள்ளும். தேவையற்ற உணவுகளை கொடுத்து இயற்கை உணவு வாழ்வு முறையில், புள்ளி மான்களை திசை மாற்றக் கூடாது.
இயற்கை உணவை தேடிச் செல்லும் முறையை மறந்து, குறிப்பிட்ட இடத்துக்கு சென்றால், தின்பண்டங்கள் கிடைக்கும் என்ற நிலையை பக்தர்களும், மக்களும் உருவாக்கி வருகின்றனர். மனித இனத்தை கண்டதும் ஓட்டம் பிடிக்கும் மான்கள், மக்கள் கையை நீட்டியதும் வந்துவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. தனக்கு தின்பண்டம் கிடைக்கிறது என்ற மனநிலைக்கு புள்ளிமான்கள் தள்ளப்பட்டுள்ளன.
தின்பண்டங்களால் மான்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும். வன விலங்குகளை ரசிப்பதுடன் நிறுத்திக் கொண்டு, அதன்மீது கரிசனம் கொண்டு தின்பண்டங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்குவதை அனைத்து தரப்பு மக்களும் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இதன்மூலம் புள்ளிமான்களின் வாழ்வை பாதுகாக்கலாம். வன விலங்குகளுக்கு தின்பண்டங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கக்கூடாது என்ற விழிப்புணர்வு பதாகைகளை தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வைக்க வேண்டும். மேலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, தின்பண்டங்கள் கொடுப்பதை தடுத்து நிறுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.