திருப்பதி: திருப்பதியில் ரூ.650 கோடி செலவில் 6 கி.மீ. தொலைவிற்கு கட்டப்பட்ட ‘ஸ்ரீநிவாச சேது’ எனும் மேம்பாலத்தை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று திறந்து வைக்கிறார்.
ஸ்மார்ட் சிட்டி கார்ப்பரேஷன் மற்றும் திருமலை திருப்பதி நிதியில் திருப்பதி நகரில் ரூ.650 கோடி செலவில் ஸ்ரீநிவாச சேது எனும் மேம்பாலத்திற்கு கடந்த சந்திரபாபு நாயுடு ஆட்சிக் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகளும் தொடங்கப்பட்டன. அதன் பின்னர் ஆட்சி மாறியதும் மறு டெண்டர் விடப்பட்டு, பணிகள் தொடங்கியது. ஆனால், கரோனா பரவல் தீவிரமடைந்ததால், இந்த மேம்பால பணி சற்று தாமதமானது. தற்போது ரூ.650 கோடி செலவில், 6 கி.மீ தூரத்திற்கு இந்த மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு இன்று திறக்கப்பட உள்ளது. இதனை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று மாலை திறந்து வைக்கிறார். நாளை முதல் பொதுமக்கள் மேம்பாலத்தை பயன்படுத்தலாம் என்று திருப்பதி மாநகராட்சி மேயர் டாக்டர் சிரிஷா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேயர் டாக்டர் சிரிஷா கூறும்போது, “தினமும் சுமார் ஒரு லட்சம் பக்தர்களும், உள்ளூர்வாசிகளும் இந்த மேம்பாலத்தை பயன்படுத்த உள்ளனர். இதன் மூலம் திருப்பதியில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கிறோம். இந்த மேம்பாலம் திருப்பதி நகருக்கே பெருமையை தேடி தரப்போகிறது’’ என்று தெரிவித்தார்.