State

திராவிட மாடல் ஆட்சியில் இந்தியாவுக்கே எடுத்துக்காட்டான மாநிலமாக தமிழகம் வளரும்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை | TN will grow as an exemplary state for India under Dravidian model governance: CM Stalin

திராவிட மாடல் ஆட்சியில் இந்தியாவுக்கே எடுத்துக்காட்டான மாநிலமாக தமிழகம் வளரும்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை | TN will grow as an exemplary state for India under Dravidian model governance: CM Stalin
திராவிட மாடல் ஆட்சியில் இந்தியாவுக்கே எடுத்துக்காட்டான மாநிலமாக தமிழகம் வளரும்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை | TN will grow as an exemplary state for India under Dravidian model governance: CM Stalin


சென்னை: “மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், 7 லட்சத்து 35 ஆயிரம் மகளிர் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் பயனாளிகளின் எண்ணிக்கை 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300- ஆக உயர்ந்துள்ளது. தகுதியுள்ள அனைவருக்கும் இந்த உரிமைத் தொகை கிடைக்கின்ற வரைக்கும், திராவிட மாடல் அரசின் இந்தப் பணி நிச்சயம் தொடரும். இதுதான் இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய வெற்றி. திராவிட மாடல் ஆட்சியில், இந்தியாவுக்கே எடுத்துக்காட்டான மாநிலமாக, தமிழ்நாடு தொடர்ந்து வளரும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.10) சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் கூடுதல் பயனாளிகளுக்கு உரிமைத் தொகை வழங்கும் விழாவில் கலந்துகொண்டார். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: “கடந்த சில நாட்களாக காய்ச்சலும், தொண்டை வலியும் எனக்கு இருந்தது. இப்போது காய்ச்சல் குறைந்துவிட்டாலும், தொண்டை வலி மட்டும் இருக்கிறது. என்னுடைய குரலை கேட்கும்போதே உங்களுக்கு நன்றாக தெரியும். அதனால்தான், சில நாட்களாக வீட்டிலேயே முழு ஓய்வு எடுத்துக்கொண்டேன்.

இந்த வாரம் முழுக்க ஓய்வெடுக்கவேண்டும் என்று என்னுடைய மருத்துவர்கள் சொன்னாலும், என்னால் மக்களை சந்திக்காமல் இருக்க முடியவில்லை. அதனால்தான், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்திலிருந்து காணொலிக் காட்சி மூலமாக இணைந்திருக்கின்ற உங்களை எல்லாம் நான் பார்க்க வந்துவிட்டேன். தொண்டை வலி இருந்தாலும், தொண்டில் தொய்வு ஏற்படக் கூடாது. அதனால்தான் வந்துவிட்டேன். உங்களை பார்க்கும்போது என்னுடைய உடல் வலி எல்லாம் குறைந்து மனது மகிழ்ச்சியில் நிறைந்துவிட்டது. இந்த ஆயிரம் ரூபாயை வாங்கும்போது உங்களுக்கு ஏற்படுகின்ற மகிழ்ச்சியைவிட, கொடுக்கும்போது, எனக்குதான் அதிகமான மகிழ்ச்சி ஏற்படுகிறது. அந்த மகிழ்ச்சியைவிட சிறந்த மருந்து எதுவாக இருக்க முடியும்? அதனால்தான், மருத்துவர்கள் அறிவுரையையும் மீறி இந்த விழாவுக்கு வந்துவிட்டேன்.

குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தேர்தலுக்கு முன்பாகவே சொன்னோம். அப்போது சிலர் என்ன சொன்னார்கள், என்ன சொன்னார்கள் என்றால், “இதையெல்லாம் நிறைவேற்ற முடியாத வாக்குறுதி”, “இவர்கள் ஆட்சிக்கு வரவே மாட்டார்கள்” இதுமாதிரி ஒவ்வொருவரும் நிறைய சொன்னார்கள். கட்டம் எல்லாம் பார்த்தார்கள். ஆனால், நீங்கள் எல்லோரும் என்ன சொன்னீர்கள்? “திமுகதான் ஆட்சிக்கு வரவேண்டும்” “திமுக சொன்னால், சொன்னதை நிறைவேற்றும். கருணாநிதி மகன் ஸ்டாலின் தான் முதல்வராக வரவேண்டும்” என்று ஓட்டு போட்டு பதிலடி தந்தீர்கள். உங்களின் கட்டளைக்கு கட்டுப்பட்டவன் நான். இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொன்னால், சொன்னதை நிச்சயம் செய்வேன். அதற்கு அடையாளமாகத்தான், மாதந்தோறும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை வழங்குகிறோம். அதனால்தான் உங்கள் முன்னால் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறேன்.

கடந்த செப்டம்பர் 15-ஆம் நாள் பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தேன். செப்டம்பர் 15, அக்டோபர் 15 என்று இரண்டு மாதங்களுக்கான 2000 ரூபாயை, ஒரு கோடியே ஆறு லட்சம் சகோதரிகள் வாங்கிவிட்டார்கள். இந்த முறை முன்கூட்டியே இன்றைக்கு மாலைக்குள் அடுத்த ஆயிரம் ரூபாயும் உங்களுக்கு வந்து சேர்ந்துவிடும்.

மகளிருக்கு, சொத்துரிமை, கல்வி, வேலைவாய்ப்பு, உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு கொடுத்து உங்களுடைய உரிமைகளுக்காக, பாதுகாவலராக இருந்த தலைவர் கருணாநிதி நூற்றாண்டில் தொடங்கி கொடுக்கப்படுகிற இந்த தொகை, உதவித்தொகை இல்லை; உரிமைத்தொகை. இந்த உரிமைத் தொகை உண்மையிலேயே தேவையும், தகுதியும் உள்ள அனைத்து மகளிருக்கும் போய்ச் சேரவேண்டும் என்பதில் நம்முடைய அரசு மிகவும் கவனமாக இருந்தது.

வி.ஏ.ஓ அலுவலகம், தாலுகா அலுவலகம் என்று எங்கேயும் செல்லாமல் அலைச்சலில்லாமல், பொதுமக்களுக்கு எந்தச் சிரமமும் இல்லாமல் இருக்கவேண்டும் என்று அரசே உங்களிடம் வந்து விண்ணப்பங்களை வாங்க எப்படி வாங்கினார்களோ அதேபோல, அந்த விண்ணப்பங்களை வாங்குகின்ற முகாம்களை அமைக்க சொன்னேன். கடந்த ஜூலை 24-ந் தேதி, தருமபுரி மாவட்டம் தொப்பூரில் அந்த முகாமை, நானே நேரில் சென்று தொடங்கி வைத்தேன். ஏறக்குறைய ஒரு கோடியே 63 லட்சம் மகளிர் விண்ணப்பித்தார்கள். இதற்கும் சிலர் விமர்சனம் செய்தார்கள்.

தகுதியுள்ள மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என்று சொன்னதை, தேர்தல் வாக்குறுதிக்கு முரணாக செய்கிறார்கள் என்று பேசினார்கள். நாம் தொடக்கத்தில் இருந்தே தெளிவாக சொன்னோம். தகுதி உள்ளவர்கள் யார் யாரென்று நேர்மையான, பாரபட்சமற்ற விதிமுறைகளின் அடிப்படையில், அரசு சார்பில் வெளியிடப்பட்டு, தமிழகத்தில் இருக்கின்ற அத்தனை குடும்ப அட்டைதாரர்களையும் விண்ணப்பிக்க சொன்னோம்.இந்தத் திட்டத்தின் நோக்கத்தையும், விதிமுறைகளின் குறிக்கோளையும் மக்கள் உள்ளார்ந்து புரிந்து கொண்ட காரணத்தால், 2 கோடியே 24 லட்சம் குடும்ப அட்டைதாரர்களில், 1 கோடியே 63 லட்சம் மகளிர் மட்டும் விண்ணப்பித்தார்கள்.

மக்களுடைய இந்த புரிதல், இந்தத் திட்ட விதிமுறைகளுக்கான நியாயத்தை காண்பித்தது. விமர்சித்தவர்கள் அமைதி ஆகிவிட்டார்கள். இப்படி விண்ணப்பத்தவர்களிலிருந்து, 1 கோடியே 6 லட்சத்து 58 ஆயிரத்து 375 தகுதியுள்ள மகளிர் தேர்ந்தெடுக்கப்பட்டு, எல்லோருக்கும் அவர்களுடைய வங்கிக் கணக்கில், இந்தத் திட்டம் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பாகவே, அதாவது, செப்டம்பர் 14-ந் தேதியே, அந்த மாதத்துக்கான உரிமைத்தொகையான 1000 ரூபாயை நாம் வரவு வைத்தோம். அந்த மாதம், வங்கிக் கணக்கு இல்லாத 2 லட்சத்து 42 ஆயிரத்து 956 பயனாளிகளுக்கு, மணியார்டர் மூலம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

அடுத்து அக்டோபர் 15-ஆம் தேதி வங்கிக் கணக்குகளில் வரவு வைத்தோம். மணியார்டர் மூலம் உரிமைத்தொகை வழங்கப்பட்ட மகளிருக்கு, வங்கிக் கணக்கு தொடங்க நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம். இவ்வளவு பெரிய திட்டம், ஒரு கோடிக்கும் அதிகமான பயனாளிகள், அவர்கள் அனைவருக்கும் 1000 ரூபாய், ஆனால், எந்தச் சிறிய புகாருக்கும் இடமில்லை. அதுதான், இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய வெற்றி. அந்தப் பெருமிதத்துடன் சொல்கிறேன், ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ நாட்டுக்கே முன்னுதாரணமாக அமைந்திருக்கக்கூடிய திட்டம்.

ஒரு திட்டம் பெற்ற வெற்றியை தொடர வேண்டுமென்றால், அதை தொடர்ந்து கவனிக்கவேண்டும். அதனால், முகாம்களில் விண்ணப்பித்து, தகுதி இருந்தும் தேர்ந்தெடுக்கப்படாத விண்ணப்பதாரர்களுக்கும், முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில், பதிவாகாமல் போன விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களும் தரவுகளை தொடர்ந்து சரிபார்க்கப்பட்டது. இதற்காக மட்டுமே அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த ஏறக்குறைய 54,220 அலுவலர்கள் மாவட்ட அளவிலும், கிராம அளவிலும் நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் சரிபார்த்து ஒரு பட்டியலை எங்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். அதில் இந்த மாதத்திலிருந்து, 7 லட்சத்து 35 ஆயிரம் மகளிர் புதிய பயனாளிகளாக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். புதிய பயனாளிகளான என் அன்புச் சகோதரிகள் அனைவருக்கும் முதலில் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கான 1000 ரூபாயை நேற்றே உங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

உங்களுடன் சேர்த்து, மொத்தம் 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 பேர் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ‘1000 ரூபாய் இனி பெறப்போகிறார்கள். நீங்கள் மட்டுமல்ல, தகுதியுள்ள யாரும் விடுபட்டுவிட கூடாது என்று கவனமாக இருக்கிறோம். அதானல்தான், விண்ணப்பித்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்ற காரணத்தை, குறுஞ்செய்தியாக அனுப்பி வைத்தோம். அந்தக் காரணம் ஏற்புடையதாக இல்லையென்றால், மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு கொடுத்தோம். அதை பயன்படுத்தி, மேல்முறையீடு செய்தார்கள். அவர்களுடைய விண்ணப்பங்களையும் பரிசீலனை செய்து கொண்டிருக்கிறோம்.

சரிபார்ப்பு அலுவலர்கள் களஆய்வு செய்து, தகுதிபெறும் மகளிருக்கு, வருகிற டிசம்பர் மாதத்தில் இருந்து, ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ மூலமாக 1000 ரூபாய் வழங்கப்படும். தகுதியுள்ள அனைவருக்கும் இந்த உரிமைத் தொகை கிடைக்கின்ற வரைக்கும், திராவிட மாடல் அரசின் இந்தப் பணி நிச்சயம் தொடரும். கடந்த மார்ச் 27-ந்தேதி சட்டமன்றத்தில் இந்தத் திட்டத்தைப் பற்றி பேசும்போது, ஏறத்தாழ 1 கோடி குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் 1000 ரூபாய் வழங்கிடும் வகையில் இந்தத் திட்டம் அமையும் என்று நான் சொன்னேன். ஆனால், இன்றைக்கு, 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 பயனாளிகள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இதுதான் இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய வெற்றி.

இதே மாதிரியான திட்டம், வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டபோது, பொதுமக்கள் கூட்ட நெரிசல்களில் எப்படிப்பட்ட இன்னல்களுக்கும், அலைக்கழிப்புக்கும் ஆளாகினார்கள் என்று ஊடகங்களில் வந்தது. அதுமாதிரி எந்த நிகழ்வும் இல்லாமல் அமைதியான முறையில் அனைத்து தகுதியுள்ள மகளிரையும் இந்தத் திட்டம் சென்று சேர்ந்திருக்கிறது. எந்தவிதமான சர்ச்சைக்கும் இடமளிக்காத வகையில் இந்தத் திட்டத்தை செயல்படுத்திக்காட்டிய பெருமை, அரசு அலுவலர்களையும், பணியாளர்களையும்தான் போய்ச் சேரும்.

இந்தத் திட்டத்துக்குப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி , அரசு அலுவலர்களுடன் இந்தத் திட்டச் செயல்பாடு குறித்து தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்கள நடத்திக்கொண்டே இருப்பார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். தொடர்ந்து களத்திலும் ஆய்வு செய்துகொண்டு இருக்கிறார். அது இனியும் தொடரும். அதில் எந்தவித சந்தேகமும் உங்களுக்கு இருக்க வேண்டிய அவசியமில்லை.

நம்முடைய தலைமைச் செயலாளர், வளர்ச்சி ஆணையர், நிதித் துறைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கடந்த சில மாதங்களாக, ஏறக்குறைய 50 முறைக்கும் மேலாக ஆய்வுக் கூட்டங்களை நடத்தி இந்தத் திட்டத்தில் எந்தவித குறைபாடும் ஏற்படாமல் செயல்படுத்துவது குறித்து விவாதித்திருக்கிறார்கள்.ஒட்டுமொத்தமாக சொல்லவேண்டும் என்றால், அமைச்சர்கள், அரசு உயர் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் முதல், தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலர், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் என அனைத்து நிலை பணியாளர்களும் தொடர்ந்து உழைத்ததின் விளைவுதான், இந்த மாபெரும் வெற்றி.

இது, ஊர் கூடி, ‘இழுத்த தேர்!’ ஊருக்காக நம்முடைய திராவிட மாடல் அரசு, ‘உருவாக்கிய தேர்!’’மக்களின் தேர்’ இது. தேசிய ஊடகங்களும், பிற மாநில அரசுகளும் கூட நம்முடைய இந்த திட்டமிடல், நிர்வாக நடைமுறையை வியந்து பார்க்கிறார்கள். அந்த வகையில், இந்தத் திட்டம் இவ்வளவு பெரிய இமாலய வெற்றி பெற உழைத்திட்ட அனைவருக்கும் என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துகளையும், என் நெஞ்சார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். மிகப்பெரிய சாதனையை அமைதியாக செய்து காட்டி இருக்கிறோம். திராவிட மாடல் ஆட்சியில், இந்தியாவுக்கே எடுத்துக்காட்டான மாநிலமாக, தமிழ்நாடு தொடர்ந்து வளரும்! வளரும்!” என்று முதல்வர் பேசினார்.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *