தருமபுரி: மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகள் சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு தருமபுரி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி வைக்கும் முன்பாகவே, திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் பலரின் வங்கிக் கணக்கில் ரூ.1000 தொகை வந்து சேரத் தொடங்கியுள்ளது. இது, இத்திட்டப் பயனாளிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இத்திட்டப் பயனாளிகளின் வங்கிக் கணக்கை சைபர் கிரைம் குற்றவாளிகள் சிலர் குறிவைத்து பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட வாய்ப்புள்ளது.
எனவே, வங்கி தரப்பில் இருந்து பேசுவதாக யாரேனும் செல்போனில் தொடர்பு கொண்டு, ‘ஓடிபி’ எண் கேட்டால் தர வேண்டாம். உரிமைத் தொகை வங்கிக் கணக்குக்கு வர ஒருசிலருக்கு தாமதம் ஏற்படலாம். அதற்காக யாரும் கவலையடைய வேண்டாம். தகுதியுள்ள பயனாளிகள் அனைவருக்கும் கண்டிப்பாக உரிமைத் தொகை வந்து சேரும். எனவே, அதுவரை பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். எனவே, மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகள் சைபர் கிரைம் குற்றவாளிகளுக்கு இடம் தராமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.