திண்டுக்கல்: தரமற்ற பட்டுப்புழு முட்டைகளால் உற்பத்தி பாதித்து நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக திண்டுக்கல் மாவட்டம் பழநி பகுதி பட்டு வளர்ப்பு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
திண்டுக்கல், சாணார்பட்டி, ஒட்டன்சத்திரம், பழநி ஆகிய பகுதிகளில் 4,000 ஏக்கர் பரப்பளவில் மல்பெரி சாகுபடி நடைபெறுகிறது. இப்பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட பட்டுப்புழு வளர்ப்பு மனைகள் உள்ளன. வெண் பட்டுக்கூடு உற்பத்தியில் 2,500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தனியார் இளம் புழு வளர்ப்பு மனைகள், மாநில அரசின் பட்டுப்புழு முட்டை உற்பத்தி மையங்களில் இருந்து முட்டை தொகுதிகளை பெற்று 7 நாட்கள் வரை பாதுகாப்பாக வளர்த்து விவாயிகளுக்கு ஒரு முட்டை தொகுப்பு (450 – 500 முட்டைகள்) ரூ.35 முதல் ரூ.40 வரை வழங்குகிறது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக அரசு சார்பில் வழங்கப்படும் தரமற்ற பட்டுப்புழு முட்டைகளால், பட்டுக்கூடு கட்டமால் புழுக்கள் இறந்து விடுதல், பட்டுக்கூடு உருவாகும் போது பாதியிலேயே புழுக்கள் இறந்து விடுதல் என 70 சதவீதம் வரை உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து பழநி மரிச்சிலம்பு பகுதியைச் சேர்ந்த பட்டுப்புழு வளர்ப்பு விவசாயி கே.சின்ராசு கூறியதாவது: “கடந்த 15 ஆண்டுகளாக பட்டு வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறேன். ஒரு முட்டை தொகுப்புக்கு 450 முட்டைகள் என மொத்தம் 300 முட்டை தொகுதிகள் வாங்கி புழுக்களை வளர்த்தேன். இதன் வாயிலாக 21 நாட்களில் 250 கிலோ பட்டுக்கூடு உற்பத்தியாக வேண்டும். ஆனால், தரமற்ற முட்டையால் புழுக்கள் இறந்து விடுதல், கூடு கட்டாமல் இருப்பது போன்ற காரணங்களால் தற்போது 100 கிலோவுக்கும் குறைவாக பட்டுக்கூடு உற்பத்தியாகி உள்ளது. அதில் முழுமையாக கட்டுப்படாத கூடுகளை குப்பையில் கொட்டும் நிலை உள்ளது.
இதனால் ரூ.1.50 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. தரமற்ற முட்டை, வீரியமற்ற புழுக்கள் காரணமாக தமிழகம் முழுவதும் பட்டுக்கூடு உற்பத்தி பெரும் சரிவை சந்தித்துள்ளது. அதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பட்டு வளர்ச்சித்துறை மூலம் பட்டு வளர்ப்பு விவசாயிகளுக்கு செயல்படுத்தப்பட்ட காப்பீடு திட்டம் முடிவடைந்த நிலையில் இன்னும் புதுப்பிக்கப்படவில்லை.
2022-ம் ஆண்டு அரசே செலுத்தி வந்த காப்பீடு தொகை ரூ.290, விவசாயிகளிடம் தற்போது வசூலிக்கப்படுகிறது. இருந்தும் காப்பீடு புதுப்பிக்காத காரணத்தால் உற்பத்தி பாதிப்பு கிடைக்க வேண்டிய இழப்பீடுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வீரியம் மிக்க முட்டை தொகுப்பை உற்பத்தி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.