
மேட்டூர்: தமிழகத்தில் 300 இடங்களில் சுற்றுலா வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணைப் பூங்கா அருகே உள்ள தமிழ்நாடு ஓட்டலை சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர், ஓட்டலின் பராமரிப்பு பணிகள், வருவாய் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, தூக்கணாம்பட்டி காவிரிக் கரை பகுதியில் பரிசல் சவாரி செய்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ”ஏற்காட்டில் ரூ.10 கோடியில் சுற்றுலாவை மேம்படுத்த பணி நடக்கிறது. மேட்டூர் அணை பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது. ஆட்சியர் மூலமாக சம்பந்தப்பட்ட துறையினர் தொடர்பு கொண்டால், நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் சுற்றுலா துறை முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் கோயில்கள் அதிக அளவில் உள்ளதால் வெளிநாடுகள் மற்றும் மாநிலங்களில் இருந்தும் அதிகமான பேர் வருகின்றனர். சேலம் மாவட்டத்துக்கு கடந்த ஆண்டு 70 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றுள்ளனர்.
கடந்த 3 மாதங்களில் 30 லட்சம் பேர் வந்துள்ளனர். தமிழகத்தில் 300 இடங்களில் சுற்றுலா வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பின்னர், முதலமைச்சர் அனுமதி பெற்று பணிகளை துவங்க உள்ளோம். தமிழகத்தை மேலும் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும்” என்றார். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம், கோட்டாட்சியர் தணிகாசலம், திமுக மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.