தருமபுரி: தமிழகத்தில் 2026-ம் ஆண்டில் பாமக ஆட்சியமைக்கும் என்று தருமபுரியில் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
தருமபுரியில் பாமக சார்பில் தருமபுரி சட்டப் பேரவை தொகுதி களப் பணியாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. வன்னியர் திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்துக்கு கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேஷ்வரன் எம்எல்ஏ தலைமை வகித்தார்.
முன்னாள் எம்.பி-க்கள் மருத்துவர் செந்தில், பாரிமோகன், மாநிலத் துணைத் தலைவர்கள் செல்வம், சாந்தமூர்த்தி, மாவட்ட அமைப்புச் செயலாளர் சண்முகம், இளைஞர் சங்க மாநிலச் செயலாளர் முருகசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, பசுமைத் தாயகம் அமைப்பின் மாநில துணைச் செயலாளர் மாது உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டத் தலைவர் செல்வகுமார் வரவேற்றார். கூட்டத்தில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று பேசியது: வரவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு பாமக இப்போதே தயாராக இருக்கிறது. இருப்பினும், கட்சியினர் தேர்தலுக்கான களப்பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும். வாக்காளர்களை தொடர்ந்து சந்திப்பதன் மூலம் தான் அவர்களின் ஆதரவைப் பெற முடியும்.
தருமபுரி மக்களவைத் தொகுதியில் கடந்த தேர்தலில் பாமக ஏன் வெற்றி வாய்ப்பை இழந்தது என அறிந்து அதற்கேற்ப செயல்பட வேண்டும். வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் பாமக போட்டியிடும். பாமக இல்லையெனில் தமிழகத்தில் சாராயம் ஆறாக ஓடும். மதுவுக்கு எதிரான தொடர் போராட்டம் மூலம் தமிழகத்தில் முழுமையான மது விலக்கை கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்வோம்.
தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் மற்றும் வாக்காளர்களை சந்தித்து வருகிறேன். அப்போது, மக்களின் மனங்களில் ஏற்பட்டு வரும் பெரிய மாற்றத்தை உணர முடிகிறது. அதன்படி, வரும் 2026 சட்டப் பேரவை தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் பாமக ஆட்சியமைக்கும். இந்த வெற்றிக்கு செயலாற்ற நாம் அனைவரும் தயாராக வேண்டும். இவ்வாறு பேசினார்.
கூட்டத்தில், மாவட்ட கவுன்சிலர் சரவணன், இளைஞர் சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார், மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி, வன்னியர் சங்க மாவட்ட தலைவர் பாலாஜி, மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், மாநில நிர்வாகி நம்பி ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில், நகர செயலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.