State

தமிழகத்தில் நிபா வைரஸ் குறித்து எவ்வித அச்சமும் இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் | There is No Fear of Nipah Virus on Tamil Nadu: Ma. Subramanian Informs

தமிழகத்தில் நிபா வைரஸ் குறித்து எவ்வித அச்சமும் இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் | There is No Fear of Nipah Virus on Tamil Nadu: Ma. Subramanian Informs
தமிழகத்தில் நிபா வைரஸ் குறித்து எவ்வித அச்சமும் இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் | There is No Fear of Nipah Virus on Tamil Nadu: Ma. Subramanian Informs


கூடலூர்: தமிழகத்தில் நிபா வைரஸ் குறித்து எவ்வித அச்சமும் இல்லை என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர், ரூ.31 கோடி மதிப்பில், கூடலூர் தாலூக்கா அரசு மருத்துவமனையை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்துவதற்காக அடிக்கல் நாட்டி, பணிகளை இன்று தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா முன்னிலை வகித்தார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பின்னர் செய்தியாளரிடம் கூறியதாவது: “நீலகிரி மாவட்டத்துக்குட்பட்ட கூடலூர் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, கூடலூர் தாலூக்கா அரசு மருத்துவமனை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மருத்துவ மனைக்கு ரூ.31 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கென்று ஏற்கெனவே 19 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் மட்டுமே இருந்தன. தமிழக முதல்வர் பொறுப்பேற்றவுடன் கூடுதலாக 19 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளை கட்டுவதற்கும், 6 புதிய மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைகளுக்கு இணையாக 25 அரசு தலைமை மருத்துவமனைகளை கட்டுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ரூ.1,100 கோடி மதிப்பில் மருத்துவமனை கட்டடப்பணிகள் நடைபெற்று வருகிறது.

கூடலூர் வட்டார அரசு மருத்துவமனையை 200 படுக்கைகள் கொண்ட மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த ரூ.31 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிக்காக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பொதுப் பணித்துறை சார்பில் 52,541 சதுர அடிப்பரப்பில் இந்த வளாகத்திற்குள்ளேயே 3 இடங்களில் இக்கட்டடங்கள் கட்டப்படவுள்ளன.

மேலும், இம்மருத்துவமனையில் இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், 7 படுக்கை வசதிகள் கொண்ட புதிய டயாலிசஸ் சிகிச்சை பிரிவு, 10 படுக்கை வசதிகள் கொண்ட மாவட்ட மனநல பிரிவு, 14 படுக்கை வசதிகள் கொண்ட அவசர சிகிச்சை பிரிவு, 20 படுக்கை வசதிகளுடன் கண் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு, 8 படுக்கை வசதிகள் கொண்ட எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை அரங்கு, 66 படுக்கை வசதிகள் மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவு என பல்வேறு புதிய பிரிவுகள் தொடங்கப்படவுள்ளன.

அண்டை மாநிலமான கேரளாவில் நிபா வைரஸின் தாக்கம் உள்ளது. தமிழ்நாடு, கேரளா இடையேயான எல்லையோர மாவட்டங்களான நீலகிரி, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, தென்காசி உட்பட்ட மாவட்டங்கள் அண்டை மாநிலங்களோடு ஒருங்கிணைந்த மாவட்டங்களாக உள்ளன. இந்த மாவட்ட எல்லைப்பகுதிகளிலும் கேரள மாநிலத்திலிருந்து வருபவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி கண்டறியப் படுவதற்கான பரிசோதனைகள் செய்யப்படவுள்ளன. இதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்த சோதனையின் போது காய்ச்சல் அறிகுறிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவர்களுக்கான சிகிச்சை அளிக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது. எனவே, தமிழகத்தை பொறுத்தமட்டில் நிபா வைரஸ் குறித்து எவ்வித அச்சமும் இல்லை” என்ரு அவர் தெரிவித்தார்.

கூடலூர் பேருந்து நிலையத்திலிருந்து, சுல்தான் பத்தேரி, குந்தலாடி, ஸ்ரீமதுரை, கூவமூலா, அரசுக் கலைக் கல்லூரி (கோழி பாலம் ) ஆகிய பகுதிகளுக்கு கூடுதல் பேருந்து சேவையை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித் தலைவர் மு.பொன்தோஸ், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் பழனிச்சாமி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பாலுசாமி, பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் (கட்டடம் மற்றும் கட்டுமானம்) அய்யாசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *