
கொடைக்கானல்: பழநி வழியாக கொடைக்கானல் செல்லும் மலைச் சாலையில் தடுப்புச்சுவர் இல்லாததால் பயணிகள் மிகுந்த அச்சத்தோடு பயணித்து வருகின்றனர்.
மலைகளின் இளவரசியான ‘குளு குளு’ கொடைக்கானல் செல்ல வத்தலகுண்டு மற்றும் பழநி வழியாக இரு பாதைகள் உள்ளன. இதில் பழநி வழியாக கொடைக்கானல் செல்லும் மலைப் பாதையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தச் சாலையில் ஏராளமான அபாயகரமான வளைவுகள், பள்ளத்தாக்குகள் உள்ளன.
ஆபத்து நிரம்பிய இந்த மலைச்சாலையில் அடிக்கடி விபத்து களும் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், சில இடங்களில் தடுப்புச் சுவர்கள் சேதமடைந்துள்ளன. சில இடங்களில் பள்ளத் தாக்குகள் நிரம்பிய பகுதியில் தடுப்புச் சுவர்களே அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் சுற்றுலா வாகனங்கள் மிகுந்த கவனத்தோடு செல்ல வேண்டி உள்ளது.
குறிப்பாக, இரவு நேரங்களில் புதிதாக பயணிப்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. விடுமுறை நாட்களில் இந்த வழியாகச் செல்லும் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கை மிக அதிகம். எனவே, அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் நெடுஞ்சாலைத் துறையினர் மலைச் சாலையில் சேதமடைந்துள்ள தடுப்புச் சுவர்களை சீரமைக்க வேண்டும்.
அபாயகரமான வளைவு, பள்ளத்தாக்கான பகுதி யில் தேவைப்படும் இடங்களில் தடுப்புச் சுவர்களை அமைக்க வேண்டும். முக்கிய வளைவுகளில் வாகன ஓட்டுநர்களுக்கு தெரியும் வகையில் இரவு நேரங்களில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும். அபாயகரமான வளைவு, பள்ளத் தாக்குகள் குறித்து எச்சரிக்கை விழிப்புணர்வு பலகை வைக்க வேண்டும்.
சேத மடைந்த குவி கண்ணாடிகளுக்கு பதிலாக புதிய கண்ணாடிகளை பொருத்த வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து நெடுஞ்சாலைத் துறையினர் கூறு கையில், விரைவில் மலைச்சாலையில் சேதமடைந்த தடுப்புச் சுவர்கள் சீரமைக்கப்படும். தேவையான இடங்களில் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்படும் என்றனர்.