கவுலூன்: ஹாங் காங் ஓபன் பாட்மிண்டன் தொடர் கவுலூன் நகரில் தகுதி சுற்றுடன் நேற்று தொடங்கியது. இதில் சமீபத்தில் இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்ற இந்தியாவின் கிரண் ஜார்ஜ் முதல் ஆட்டத்தில் 21-15, 21-17 என்ற நேர் செட்டில் சீன தைபேவின் யு ஜென் ஷியை வீழ்த்தினார்.
தொடர்ந்து நடைபெற்ற 2வது தகுதி சுற்று ஆட்டத்தில் மலேசியாவின் ஜுன் ஹாவோ லீயோங்கிடம் 20-22, 21-14, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து பிரதான சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார். மற்ற இந்திய வீரர்களான மிதுன் மஞ்சுநாத், ரவி ஆகியோரும் தகுதி சுற்றை தாண்டவில்லை. அதேவேளையில் மகளிர் பிரிவில் இந்தியாவின் மாளவிகா பன்சோத் பிரதான சுற்றுக்கு முன்னேறினார். தகுதிசுற்றில் மாளவிகாவை எதிர்த்து விளையாடிய தாய்லாந்தின் பிட்சமன் ஓபட்னிபுட் காயம் காரணமாக வெளியேறியதால் பிரதான சுற்றில் விளையாடும் வாய்ப்பை மாளவிகா பெற்றார்.
மகளிருக்கான இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-15, 16-21, 21-16 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் டெபோரா ஜில்லே, செரில் சீனென் ஜோடியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.