எடின்பர்க்: கடந்த 1996-ல் குளோனிங் முறையில் டோலி எனும் ஆடு உருவாக்கப்பட்டது. இந்த பணியில் ஈடுபட்ட குழுவை வழிநடத்திய பிரிட்டிஷ் விஞ்ஞானி இயன் வில்முட் காலமானார். அவருக்கு வயது 79.
அவர் உயிரிழந்த தகவலை ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அவர் உலகுக்கு அறிவித்த போது அது பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியது. முதலில் இந்த ஆடு ‘6LL3’ என அறியப்பட்டது. அதன் பின்னர் அமெரிக்க பாடகர் டோலி பார்ட்டனின் நினைவாக டோலி என்று பெயரிடப்பட்டது. இது விஞ்ஞான புரட்சியாகவும் பார்க்கப்பட்டது.
குளோனிங் என்பது உயிரியலில் படியெடுப்பு (Cloning). அதாவது, ஒரு உயிரினத்தை மரபியல் ரீதியில் அப்படியே உருவாக்குவது. உயிரணு மூலக்கூறுகள், உயிரணுக்கள் போன்றவற்றை மூதாதையிலிருந்து உருவாக்கும் செயல்முறையே குளோனிங் என அறியப்படுகிறது.
பார்கின்சன் நோயின் காரணமாக அவர் நேற்று (செப். 10) உயிரிழந்தார். “டோலி ஒரு போனஸ். சில நேரங்களில் விஞ்ஞானிகள் கடினமாக உழைக்கும்போது அவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். அப்படித்தான் அது நடந்தது” என முன்பு ஒரு பேட்டியில் அவர் தெரிவித்தார்.