சென்னை: சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் கடந்த 9 மாதங்களில் 3 பேர் இறந்துள்ளனர்,
தற்போது மருத்துவமனையில் 300 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு பாதிப்பு உலகளவில் அதிகமாக பரவிவந்தாலும் தமிழகத்தில் கட்டுப்பாட்டில் இருக்கிறது. முதல்வர் வழிகாட்டுதலின்படி, சுகாதாரத்துறையும், ஊரக உள்ளாட்சிதுறையும் இணைந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வீடுகளில் அக்கம்பக்கத்தில் தேவையற்ற வகையில் தேங்கியிருக்கும் தண்ணீரை அப்புறப்படுத்த வேண்டுமென்று தெரிவிக்கிறது.
நல்ல நீரில்தான் டெங்கு கொசுக்கள் உற்பத்தி அதிகமாகும் என்பதால், அந்தகொசு உற்பத்தியை தடுப்பது குறித்த நடவடிக்கைகளை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் இந்த திட்டங்கள் மிகச்சிறப்பான செயல்பாட்டில் உள்ளது. ஒவ்வொருபருவமழை தொடங்குவதற்கு முன்பாகடெங்கு பாதிப்புகள் ஆரம்பிக்கும் என்பதால், அதனை தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
செப்டம்பர் 16-ம் தேதி (இன்று) சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. தமிழகம் முழுவதும் இருந்து அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், இணைஇயக்குநர்கள், துணை இயக்குநர்கள் என300-க்கும் மேற்பட்ட உயர் அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் டெங்கு பாதிப்பு, டெங்கு இல்லாத நிலையை உருவாக்குவது, டெங்கு தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.