மாநிலம்

டிச.4-ல் சென்னை, செங்கை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு மழை விடுமுறை | leave announced for Tiruvallur district school college on december 4

டிச.4-ல் சென்னை, செங்கை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு மழை விடுமுறை | leave announced for Tiruvallur district school college on december 4


திருவள்ளூர்: புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் டிசம்பர் 4-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, தற்போது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து சென்னைக்கு கிழக்கு, தென்கிழக்கே 510 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மேலும், இது நெல்லூரிலிருந்து தென் கிழக்கு திசையில் 630 கி.மீ தொலைவிலும், மசூலிப்பட்டினத்திலிருந்து தென் கிழக்கு திசையில் 710 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டிருக்கிறது. இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணிநேரத்தில் புயலாக மாறும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதனால் கடலோர மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கனமழை மற்றும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 4-ம் தேதி (திங்கள்கிழமை) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார். மேலும், அதி கனமழை காரணமாக, பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் வர வேண்டாம் எனவும், மீனவர்கள் பாதுகாப்பாக இருக்கவும் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். இதனிடையே, திருவள்ளூர் மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகளைச் சூழ்ந்துள்ள மழைநீர் வடியாமல் இருப்பதால் மக்கள் அவதியுற்று வருகின்றனர்.

செங்கல்பட்டு: புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாணவர்களின் நலன் கருதி வரும் 4-ம்தேதி (திங்கள்கிழமை) செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, காஞ்சிபுரம்: மிக்ஜாம் புயல் வருகிற 5-ஆம் தேதி கரையை கடக்க விருக்கிறது. இந்த நிலையில், தமிழகத்துக்கு வரவிருக்கும் புயல் பாதிப்பு காரணமாக மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் டிசம்பர் 4-ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

டிச.4-ல் எங்கெல்லாம் மிக கனமழை? – டிசம்பர் 4-ம் தேதியன்று வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *