Tech

‘ஜேம்ஸ் வெப்’ முதல் ஏஐ வரை: சமீப ஆண்டுகளில் அறிவியல் – ஒரு பார்வை | Science in recent years

‘ஜேம்ஸ் வெப்’ முதல் ஏஐ வரை: சமீப ஆண்டுகளில் அறிவியல் – ஒரு பார்வை | Science in recent years


உலகம் நொடிக்கு நொடி மாறிக் கொண்டிருக்கிறது. உலகின் இயக்கு விசைகளில் ஒன்றான அறிவியலும் புதிய மேம்பாடுகளும் ஒவ்வொரு நாளும் வளர்ந்துவருகிறது. ஒரு துறை பயணிக்கும் திசையை வரையறுக்க, குறிப்பிட்ட கால அளவீடு தேவைப்படுகிறது. ஆனால், அறிவியலைப் பொறுத்தவரை ஒரு நாள் என்பதே அதிகபட்ச காலாவதிக் காலம் எனும் அளவில் இன்று அத்துறையில் மேம்பாடுகள் தீவிரமடைந்திருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளின் அறிவியல் மேம்பாடுகள் பற்றிய சிறு தொகுப்பு இங்கே:

அடிப்படை அலகுகளுக்குப் புதிய வரையறை! – கிலோகிராம், நொடி, மீட்டர், ஆம்பியர், கெல்வின், மோல், கேண்டெலா ஆகிய அடிப்படை அலகுகளின் வரையறையை ‘அனைத்துலக அலகுகள் முறை’ (International System of Units) நிர்ணயிக்கிறது. இந்தியா உள்பட 60 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட அனைத்துலக அளவியல் அமைப்பின் மாநாடு 2018 இல் பாரிஸில் நடைபெற்றது.

இதில் கிலோகிராம், கெல்வின், மோல், ஆம்பியர் ஆகிய நான்கு அலகுகளின் வரையறையை மாற்றி அமைப்பதற்கு முன்மொழியப்பட்டது. 130 ஆண்டுகள் பழமையான கிலோகிராம் அலகுக்கு, பிளாங்க் மாறிலியை அடிப்படையாகக் கொண்டு வரையறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 2019 மே 20 அன்று (உலக அளவீட்டியல் தினம்) நடைமுறைக்கு வந்தது.

கருந்துளையின் முதல் படம்! – நிகழ்வெல்லை தொலைநோக்கி (Event Horizon Telescope) ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த சுமார் 200 அறிவியலாளர்களைக் கொண்ட குழு, கருந்துளையின் முதல் ஒளிப்படத்தை 2019 ஏப்ரல் மாதம் வெளியிட்டது; உலகம் முழுக்கப் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்ட வானொலி அதிர்வெண் தொலைநோக்கியின் (radio telescopes) வலைப்பின்னல்களில் இருந்து பெறப்பட்ட பல்லாயிரம் ஒளிப்படங்களை இணைத்து மெஸ்ஸியர் 87 (M87) என்று பெயரிடப்பட்ட கருந்துளையின் ஒட்டுமொத்தப் படத்தை அக்குழுவினர் உருவாக்கினர்.

ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி: 2022ஆம் ஆண்டின் முக்கிய அறிவியல் நிகழ்வுகளில் ஒன்றாக ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அமைந்தது. அகச்சிவப்புக் கதிர்களை உள்வாங்கும் இந்தத் தொலைநோக்கி, ஹப்பிள் தொலைநோக்கியைவிடத் துல்லியமாகவும் நுணுக்கமான தரவுகளுடனும் ஆழ்புலத்தைப் படம்பிடித்திருக்கிறது.

பெருவெடிப்பின்போது உருவான முதல் விண்மீன் கூட்டங்கள், பூமியைப் போன்று உயிர்வாழத் தகுந்த புறக்கோள்கள் பிரபஞ்சத்தில் வேறெங்கும் இருக்கின்றனவா, விண்மீன் கூட்டங்கள் எவ்வாறு ஒன்றோடொன்று இணைகின்றன என்பன போன்ற பல்வேறு அம்சங்களைத் தொடர்ந்து கண்டறிந்துவருகிறது.

மலேரியாவுக்குத் தடுப்பூசி: ஒவ்வோர் ஆண்டும், 90 நாடுகளில், சுமார் 6,27,000 பேர் மலேரியாவுக்குப் பலியாகின்றனர். இந்நிலையில், RTS,S/AS01 (RTS,S) என்கிற மலேரியா தடுப்பூசியை உலகச் சுகாதார நிறுவனம் பரிந்துரைந்திருப்பது மலேரியா ஒழிப்பில் முக்கிய முன்நகர்வாகக் கருதப்படுகிறது.

கானா, கென்யா, மலாவி ஆகிய ஆப்பிரிக்க நாடுகளில் முதல் கட்டமாக மலேரியா தடுப்பூசி திட்டம் செயல்பாட்டில் உள்ள நிலையில், 2019ஆம் ஆண்டு தொடங்கிச் சுமார் 15 லட்சம் குழந்தைகளுக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு: ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனம், செப்டம்பர் 2022இல் அறிமுகப்படுத்திய ‘சாட்ஜிபிடி’ (ChatGPT) என்னும் செயற்கை நுண்ணறிவு மென்பொருள், அநேகமாக எல்லாத் துறைகளிலும் தாக்கம் செலுத்திவருகிறது. மனிதர்களுக்கு அச்சுறுத்தலாகப் பார்க்கப்பட்டாலும், ஆராய்ச்சிகளில் செயற்கை நுண்ணறிவின் பங்கு அளப்பரியதாக மாறிவருகிறது. செடி, கொடி தொடங்கி அனைத்து உயிரினங்களிலும் ஆயிரக்கணக்கான புரத வகைகள் உள்ளன.

புரதங்களின் வடிவம் என்ன, அவற்றில் உள்ள மூலக்கூறுகள் எவ்வாறு அமைந்துள்ளன என்று கண்டறிவது உயிரியலிலும் வேதியியலிலும் முக்கியமாகும். முன்பு ஒரு புரதத்தின் அமைப்பைக் கண்டறிவதற்கே பல ஆண்டுகள் ஆகும். ஆனால், சில மாதங்களிலேயே 20 கோடிக்கும் மேலான புரதங்களின் வடிவமைப்பைக் கணித்துள்ளது செயற்கை நுண்ணறிவு. மேலும், இவ்வாண்டில் ஒளிப்படங்கள், காணொளிகள் உருவாக்கத்திலும் எடிட்டிங் முதற்கொண்டு ஆற்றல், விண்வெளி எனப் பல்வேறு துறைகளிலும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் நீள்கிறது.

இந்திய அறிவியல் நிகழ்வுகள்: கரோனா நோய்த்தொற்றுக்கான கோவாக்சின் தடுப்பூசி இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது மட்டுமல்லாமல், லட்சக்கணக்கானோர் அந்தத் தடுப்பூசியை எடுத்துக்கொண்டார்கள். கரோனா தொற்றுக்கு நாசிவழி செலுத்தப்படும் (iNCOVACC) முதல் தடுப்பு மருந்தை இந்தியா 2022இல் அறிமுகப்படுத்தியது. ஊசிவழியே தடுப்பூசி செலுத்துவதற்குத் தேர்ந்த மருத்துவப் பணியாளர்கள் தேவை. ஆனால், நாசிவழி எளிதானது. இம்மருந்து கரோனா தொற்றுக்கானது என்றாலும், எதிர்காலத்தில் பல்வேறு நோய்களுக்குமான தடுப்புமருந்துக் கண்டுபிடிப்புகளில் முக்கிய நகர்வாகவும் இருக்கும்.

விண்வெளி ஆராய்ச்சியைப் பொறுத்தவரை, 61 செயற்கைக்கோள்களுடன் இந்தியா தன்னை வலுவாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளது; நிலவுக்குச் சந்திரயான் 3, சூரியனுக்கு ஆதித்யா எல்-1 என விண்வெளி ஆராய்ச்சியில் புதிய சாத்தியங்களை இந்தியா திறந்துவிட்டுள்ளது. விண்வெளியிலிருந்து மனிதர்கள் புவிக்குத் திரும்பும்போது, அவர்களைத் தாங்கிவரும் பாராசூட்டானது மிதமான வேகத்தில் பயணித்துத் தரையிறங்க வைக்கும் ஆய்வு வெற்றியில் முடிந்தது; விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்தைச் செயல்படுத்துவதில் ஒரு முக்கியப் படியாக இது அமைந்தது.

Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *