சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1993-ம் ஆண்டு வெளியான படம், ‘ஜென்டில்மேன்'. இதில் அர்ஜுன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில் உட்பட பலர் நடித்திருந்தனர். கே.டி.குஞ்சுமோன் தயாரித்திருந்தார். சூப்பர் ஹிட்டான இந்தப் படத்தின் 2ம் பாகம் இப்போது உருவாகிறது. கோகுல் கிருஷ்ணா இயக்கும் இந்தப் படத்துக்கு கீரவாணி இசையமைக்கிறார். இதில் சேத்தன் சீனு, நயன்தாரா சக்கரவர்த்தி, சுதா ராணி, பிரியா லால், சுமன், ஸ்ரீ ரஞ்சனி, சித்தாரா, காளி வெங்கட் உட்பட பலர் நடிக்கின்றனர். கே.டி.குஞ்சுமோன் தயாரிக்கும் இதன் தொடக்க விழா கடந்த மாதம் சென்னையில் நடந்தது.
இந்நிலையில் இந்தப் படத்தில் இந்தி நடிகை பிராச்சி தெஹ்லான் இணைந்துள்ளார். அவர் கூறும்போது, “மாமாங்கம் படத்தில் என் நடிப்பைப் பார்த்துவிட்டு இந்தப் படத்துக்கு அழைத்தார்கள். இதில் என் கதாபாத்திரம் பற்றி இப்போது கூற இயலாது. சென்னை, ஹைதராபாத் உட்பட பல இடங்களில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. அதில் கலந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன்” என்றார்.