புதுடெல்லி: ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் கடந்த 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த தலைவர்களுக்கு இந்திய ரோஸ்வுட் பேழை, பஷ்மினா சால்வைகள், காஷ்மீரி குங்குமப்பூ, பெக்கோ டார்ஜிலிங், நீலகிரி தேயிலை, அரக்கு பள்ளத்தாக்கு காபி, சுந்தரவன காடுகளில் இருந்து பெறப்பட்ட தேன், ஜிக்ரானா வாசனை திரவியம் ஆகியவை அடங்கிய பரிசுப் பெட்டகம் வழங்கப்பட்டது.
இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம் மற்றும் தனித்துவமான உயிரியல் பன்முகத்தன்மையை கருத்தில் கொண்டு இந்தப் பொருட்கள் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டன.
பித்தளை தகடு பதிக்கப்பட்ட ரோஸ்வுட் பேழை, இந்திய கைவினைத் திறனுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இந்திய கலாச்சார மற்றும் நாட்டுப்புற புராணங்களில் இது சிறப்பிடம் பெற்றுள்ளது. சிவப்பு தங்கம் என்று அழைக்கப்படும் காஷ்மீரி குங்குமப்பூ அரிய மருத்துவப் பண்புகளை கொண்டுள்ளது. உலகில் அதிக விலை கொண்ட நறுமண உணவுப் பொருளாக இது விளங்குகிறது.
மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மலைப் பகுதியில் 3,000 அடி முதல் 5,000 அடி வரை நறுமணம் மற்றும்தரம் மிகுந்த பெக்கோ தேயிலை விளைவிக்கப்படுகிறது.இதுபோல் தென்னிந்திய மலைகளில் 1,000 அடி முதல் 3,000 அடி வரை நீலகிரி தேயிலை விளைகிறது.
ஆந்திராவின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரக்கு பள்ளத்தாக்கில் இயந்திரங்கள் மற்றும் ரசாயனம் பயன்பாடின்றி இயற்கையான முறையில் உற்பத்தி செய்யப்படும் காபி மிகவும் பிரபலமானது.
கங்கை, பிரம்மபுத்திரா மற்றும் மேக்னா நதிகள் வங்காளவிரிகுடாவில் சங்கமிக்கும் பகுதியில் உலகின் மிகப்பெரிய சதுப்புநில காடான சுந்தரவனக் காடுகள் உள்ளன. இங்கு சேகரிக்கப்படும் தேன் குறைந்த பிசுபிசுப்பு கொண்டது. அப்பகுதியின் உயிரி பன்முகத் தன்மையை பிரதிபலிக்கிறது.