புதுடெல்லி: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் 75 ஆண்டு கால நாடாளுமன்ற பயணம், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா குறித்து விவாதம் நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் செப்.18 முதல் 22-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு கூட்டத்துக்கான நிகழ்ச்சி நிரல் வெளியிடப்படாததால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இதற்கிடையே, வரும் 17-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று முன்தினம் தெரிவித்தார்.
இந்நிலையில், நாடாளுமன்ற செய்தி இதழில் இந்த சிறப்பு கூட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ‘நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரின் முதல் நாளில், அரசியல் சாசன நிர்ணய சபை தொடங்கப்பட்டது முதல் 75 ஆண்டுகால நாடாளுமன்ற பயணம் குறித்து விவாதம் நடைபெறும். குறிப்பாக, நாடாளுமன்ற சாதனைகள், அனுபவங்கள், நினைவுகள், படிப்பினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.
இதுதவிர, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணிநிபந்தனைகள், பதவிக் காலம்)மசோதா இந்த கூட்டத் தொடரில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அந்த செய்திஇதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழைக்கால கூட்டத் தொடரின்போது மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கறிஞர்கள் மசோதா: மக்களவையின் தற்காலிக நிகழ்ச்சி நிரலில், வழக்கறிஞர்கள் (திருத்த) மசோதா மற்றும் நாளிதழ்கள், பருவ இதழ்கள் பதிவு மசோதா ஆகியவை இடம்பெற்றுள்ளன. மாநிலங்களவையில் இந்த மசோதாக்கள் கடந்த ஆக.3-ம் தேதிநிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர, மாநிலங்களவையில் கடந்த ஆக.10-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட அஞ்சல் அலுவலக மசோதாவும் மக்களவை நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றுள்ளது.
இதுபோல, புழக்கத்தில் இல்லாத சட்டங்களை ரத்து செய்யவகை செய்யும் ரத்து மற்றும்திருத்த மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிஉள்ளது. இது ஏற்கெனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இதனால், அதுபற்றி இந்த சிறப்பு கூட்டத் தொடரில் விவாதிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியானது.
பாஜக கொறடா உத்தரவு: இதற்கிடையே, நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் பாஜக உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று அக்கட்சி கொறடா உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு உறுப்பினர்களின் ஆதரவு அவசியம் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
ஆணையர் நியமன சர்ச்சை: இப்போது தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல்ஆணையர்கள் மத்திய அமைச்சரவையின் பரிந்துரை அடிப்படையில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர். இதனால், மத்திய அரசின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் மாற்றம் கொண்டுவர வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு: இந்த மனுக்களை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து கடந்த மார்ச் மாதம் தீர்ப்பு வழங்கியது.
அதில், ‘தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்ய மத்திய அரசு ஒரு சட்டம் இயற்ற வேண்டும். அதுவரை, பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர், தலைமை நீதிபதி ஆகிய 3 பேர் அடங்கிய குழுதான் தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்ய வேண்டும். தேர்தல் ஆணையம் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த சூழலில்தான், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா கடந்த மழைக்கால கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர், ஒரு மத்திய அமைச்சர் ஆகியோர் அடங்கிய குழுவின் பரிந்துரை அடிப்படையில் தேர்தல் ஆணையர்களை குடியரசுத் தலைவர் நியமிப்பார் என இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய கட்டிடத்தில்..: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் வரும் 18-ம் தேதி தொடங்குகிறது. முதல்நாள் நிகழ்வுகள் வழக்கம்போல பழைய கட்டிடத்திலேயே நடைபெற உள்ளன. அடுத்த நாள் (செப்.19) முதல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சிறப்பு கூட்டத் தொடர் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.