சென்னை: பாரம்பரியமிக்க சென்னையின் முக்கியஅடையாளமான எழும்பூர் அருங்காட்சியகத்தின் சுற்றுச்சுவர்கள் பராமரிப்பின்றி பொழிவிழந்து காணப்படுகின்றன. இதை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டின் 2-வது மிகப் பழமையான அருங்காட்சியகம் சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் அமைந்துள்ளது. 16 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தில் 46 காட்சியகங்கள் கொண்ட 6 கட்டிடங்கள் உள்ளன. பழங்கால கலைப்பொருட்கள், கல் சிற்பங்கள், தாவரவியல் காட்சியகங்கள், பட தொகுப்புகள் ஆகியவை பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும். மேலும் நாட்டுப்புற கலை மற்றும் இசையை பாதுகாக்கும் காட்சியகங்களும் உள்ளன.
இதுதவிர பழங்கால உலோகவியல், நாணயவியல் மற்றும் ரசாயன பாதுகாப்பு காட்சியகங்கள் ஆகியன பொதுமக்களை கவர்கின்றன. குழந்தைகளுக்கான காட்சிக் கூடத்தில், குழந்தைகள் பிரிவு,தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானக் கலைகள் ஆகியவை உள்ளன. யானையின் எலும்புகூடு, நீல திமிங்கலத்தின் எலும்புக்கூடு உள்ளிட்டவை பார்வையாளர்களை மிகவும் வியக்க வைப்பவையாகும். இவற்றை குறைந்த கட்டணத்தில் கண்டுகளிக்க அரசு வழிவகை செய்துள்ளது.
இப்படி பழங்கால பொக்கிஷங்களை பார்ப்பது மட்டுமின்றி, படிக்கவும் உதவும் கன்னிமாரா நூலகமும் இந்த வளாகத்தில் செயல்படுகிறது. நூற்றாண்டு பழமையான அரிய புத்தகங்களுக்காக மட்டுமின்றி, அதன் கட்டிடக் கலைக்காகவும் கன்னிமாரா பேசப்படுகிறது. இப்போது ஆங்கில நூல்கள் பிரிவு, குடிமைப்பணிக் கல்வி மையம், குழந்தைகள் நூலகம், பருவ இதழ் பிரிவு, குறிப்பு உதவிப் பிரிவு, இந்திய மொழிகள் பிரிவு, பாடநூல் பிரிவு உள்ளிட்ட பிரிவுகள் இங்கு உள்ளன.
தனி வருகைப் பதிவேடு பராமரிக்கும் அளவுக்குப் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் கன்னிமாராவையே நாடுகின்றனர். கன்னிமாரா நூலகத்தில் உள்ள அனைத்து நூல்களின் தலைப்புகளும் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. பார்வையற்ற, செவித்திறன் குன்றிய மாற்றுத் திறனாளிகள் படிப்பதற்கு ஏற்ற பிரெய்லி மற்றும் ஒலிப்புத்தக வசதிகள் இங்கு உள்ளன. இப்படி பல்வேறு வரலாற்று சின்னங்கள் நிரம்பிய பொக்கிஷத்தை அடைகாத்திருக்கும் இந்த வளாகத்தின் சுற்றுச்சுவர் சேதமடைந்து இருப்பது பார்வையாளர்களை கவலையடையச் செய்துள்ளது.
இது தொடர்பாக அருங்காட்சியகத்துக்கு வழக்கமாக வந்து செல்லும் சைதாப்பேட்டையைச் சேர்ந்த ஆவுடையப்பன் கூறியதாவது: விடுமுறை என்றாலே எங்கள் நினைவுக்கு வருவது எழும்பூர் அருங்காட்சியகம் தான். ஒரு முறை நூலகம், அடுத்த முறை அருங்காட்சியகம் என அடிக்கடி வந்து செல்லும் பொழுதுபோக்கு பகுதி இது. இது வெறும் அருங்காட்சியம் மட்டும் இல்லை. கலாசாரம், பண்பாட்டின் பிரதிபலிப்பு. அறிவை வளர்க்கும் ஒரு பொக்கிஷமான இடம்.
இந்த வளாக உட்புறத்தை அழகாகவும் நவீனமாகவும் மாற்றியுள்ள நிர்வாகத்தினர், அருங்காட்சியகத்தைச் சுற்றியுள்ள மதில் சுவற்றின் மீது கவனம் செலுத்தவில்லை. பல மாநிலத்தவரும் ஏன் பல வெளிநாட்டு மக்களும் வந்து செல்லும் இடத்தை சர்வதேச தரத்துக்கு இல்லாவிட்டாலும் குறந்தது முகம் சுளிக்கும் அளவுக்காவது இல்லாமல் இருக்கும் வகையிலான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக அருங்காட்சியகங்கள் துறை உயரதிகாரிகள் கூறியதாவது: கடந்த நிதியாண்டின் சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது, சென்னை அரசு அருங்காட்சியக வளாகத்தின் இருபுறம் உள்ள பாரம்பரிய சுற்றுச்சுவரின் பழுதடைந்த பகுதிகளையும் உடைந்த நுழைவு வாயில் முகப்பையும் பழமை மாறாமல், அதே வகை கற்களைக் கொண்டு மீட்டுருவாக்கி இரும்பு கிரில் கதவுகளுடன் மாற்றி அமைக்கும் பணிகள் ரூ.45 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும் என அப்போதைய தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பை வெளியிட்டார்.
வழக்கமான புனமரைப்புப் பணி என்றால் பொதுப்பணித் துறை மூலம் இடித்து அகற்றி, மாற்று சுவரை கட்டிவிடலாம். ஆனால் நூறாண்டுகளை கடந்து நிற்கும் சுவர்களை பழமை மாறாமல் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க மெனக்கெட வேண்டும். சுற்றுச்சுவரின் ஒவ்வொரு பகுதியும் பல்வேறு தசாப்தங்களில் கட்டப்பட்டது. அந்த கற்களுக்கு இணையாக தற்போது சந்தையில் உள்ள கற்கள் என்னென்ன, எந்தெந்த மாநிலங்களில் இருந்து கற்களை கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன.
இதுதொடர்பாக விரிவான திட்ட அறிக்கையும், பழமைக்கால கட்டிடக் கலைஞர்களிடம் ஆலோசனை பெற்றும் அதற்கான உத்தேச தொகை போன்றவற்றையும் கணக்கிடவே கடந்த ஆண்டு முழுவதும் தேவைப்பட்டது. இதையடுத்து நடப்பாண்டு ஜனவரி மாதம் ரூ.45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. நாள்தோறும் அருங்காட்சியகங்கள் துறை ஆணையர் சுற்றுச்சுவர்சீரமைப்புப் பணிகளை மேற்பார்வையிடுகிறார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்குமாறு டெண்டரில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நமக்குத் தேவையான கற்கள் விரைவாக கிடைத்து, மழையும் பெரியளவு பாதிப்பைஏற்படுத்தாமல் இருந்தால் நடப்பாண்டு இறுதிக்கு முன்பாகவே பணிகள் நிறைவடையும். இதேபோல், எழும்பூர் அருங்காட்சியகத்தின் வளாகத்தில் கண்காட்சி கூடத்தின் பழமையான கட்டிடங்கள் பழமை மாறாமல் சீரமைக்கப்பட்டு புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. பழமையான மேற்கூரை ஓடுகள் மாற்றி அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தியேட்டரை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அங்கு சேதமடைந்த தரை மற்றும் இருக்கைகள் புதுப்பிக்கப்படுகின்றன. புதியதாக வர்ணம் பூசும் பணிகளும் நடந்து வருகின்றன. ஒரு சில மாதங்களின் இப்பணிகள் முடிவடையும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.